Published On: Thursday, January 14, 2016
மறைந்த முப்தி முகமது சையதுக்கு பிரதமர் மோடி உரிய மரியாதை அளிக்கவில்லை: மகள் மெஹ்பூபா வருந்தியதாக தகவல்
மறைந்த காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையதுக்கு பிரதமர் மோடி உரிய மரியாதை அளிக்கவில்லை என்று முப்தியின் மகள் மெஹ்பூபா முப்தி வருத்தமடைந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வியாழனன்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சோனியா காந்தி, மறைந்த காஷ்மீர் முதல்வர் முப்தியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க வருகை தந்தார். அப்போது சையதின் மகள் மெஹ்பூபாவை பற்றி விசாரித்த சோனியா, மெஹ்பூபா, பிரிதிவிராஜ் சாலையில் உள்ள ஜம்மு காஷ்மீர் இல்லத்துக்குச் சென்று தனது உடமைகளை எடுத்து வரச் சென்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், சோனியா காந்தி மெஹ்பூபா திரும்பி வரும் வரை அரைமணி நேரம் காத்திருந்தார். சோனியாவின் இந்தச் செய்கை மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் பெரிதும் பாராட்டபட்டதோடு சோனியாவின் இந்த ஆதரவு குறித்து மீண்டும் மீண்டும் பிடிபி கட்சி தலைவர்களால் விவாதிக்கப்பட்டுள்ளது, சோனியா காந்தியின் இத்தகைய ஆதரவு நெகிழ்ச்சி மிகு தருணமாக பார்க்கப்பட்டதோடு, பாஜக தலைமையிடமிருந்து இத்தகைய நெருக்கம் வரவில்லை என்று மூத்த பிடிபி தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு இது பற்றி தெரிவிக்கும் போது, “பிடிபி கட்சியின் தலைவர்களில் ஒரு சிலருக்கு பாஜக தலைமை மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மோடி. அதாவது கடந்த நவம்பரில் ஸ்ரீநகரில் மோடி பேசிய போது இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் முப்தி முகமது சையதின் பங்கை இருட்டடிப்பு செய்ததாக பிடிபி கட்சியினரின் சில பிரிவினர் வருந்தினர்.தந்தையின் மறைவுக்கு ஸ்ரீநகருக்கு மரியாதை நிமித்தமாக வந்த சோனியா காந்தி, சையதின் மகள் மெஹ்பூபாவின் மனநிலையையும் புரிந்து கொள்ள முயற்சி செய்தார்” என்றார்.
மேலும், மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முப்தி முகமது சையதை பிரதமர் மோடி வந்து பார்க்கவேயில்லை என்பதும் பிடிபி கட்சித்தலைவர்களிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும், இது மெஹ்பூபாவை வருத்தம் கொள்ளச் செய்தது என்றும், தனது தந்தைக்கு கிட்ட வேண்டிய உரிய மரியாதையை மோடி வழங்கவில்லை என்றும், உயிருக்குப் போராடிய தனது தந்தையை பார்க்க ஒருவரும் வரவில்லை என்றும் மெஹ்பூபா வருந்தியதாக பிடிபி கட்சித்தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
ஆனாலும், தனது தந்தையின் எந்த ஒரு முடிவுக்கு எதிராகவும் மெஹ்பூபா செயல்பட்டதில்லை என்பதால், பாஜக கூட்டணி அரசில் மெஹ்பூபா முதல்வராக பொறுப்பேற்பார் என்றே பிடிபி தரப்பினர் கூறுகின்றனர். ஆனாலும் தனது தந்தைக்கு பாஜக மரியாதை அளிக்கவில்லை என்பது மெஹ்பூபாவின் மனதில் காயமாகியுள்ளதாக பிடிபி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
