Published On: Friday, January 15, 2016
இன்று வட கிழக்கிலும் மலையகத்திலும் ஒரே நாளில் தேசிய பொங்கல் விழா
இன்று வட கிழக்கிலும் மலையகத்திலும் ஒரே நாளில் தேசிய பொங்கல் விழா நடைபெறுவது இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் ஒரு செயலாகும். குறிப்பாக இந்த விழாக்களில் ஜனாதிபதிஇ பிரதமர் பெரும்பான்மை அமைச்சர்கள் கலந்து கொள்வது தமிழர்களுக்கும் இந்த அரசாங்கத்திற்கும் ஐக்கியமான ஒரு நெருங்கிய உறவு இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலையக பாரம்பரிய கலை, கலாசார நிகழ்வுகளுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் 15.01.2016 அன்று அட்டன் டன்பார் மைதானத்தில் 2016ம் ஆண்டுக்கான தைப்பொங்கல் விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து பேசிய இராஜாங்க அமைச்சர்..
இன்று இலங்கையில் அனைத்து சமூகங்களை போல தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கத்தில் தமிழர்களுக்காக எதைஎதை பெற்றுக்கொடுக்க வேண்டுமோ அவை அனைத்தையும் பெற்றுக்கொடுக்க நாங்கள் மூழுமையாக முயற்சி செய்வோம்.
கடந்த பல வருடங்களாக பிரதேச சபைகள் ஊடாக பெருந்தோட்ட மக்களுக்கு சேவை செய்ய முடியாது என்ற ஒரு நிலை இருந்தது. அதனை மாற்றியமைக்க யாரும் முயற்சி செய்யவில்லை. ஆனால் நாங்கள் இந்த நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முயற்யினால் அண்மையில் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் முன்வைத்த அந்த பிரேரணையை நிறைவேற்றி இன்று பெருந்தோட்டங்களுக்கும் பிரதேச சபைகள் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இது எமது சமூகத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(க.கிஷாந்தன்)
