Published On: Thursday, January 14, 2016
ஹஜ் யாத்திரை பயணிகளுக்கு மதுரை, திருநெல்வேலி பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களில் தனி கவுன்டர்
'ஹஜ் யாத்திரை பயணிகளுக்கு மதுரை, திருநெல்வேலி பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களில் தனி கவுன்டர் செயல்படுகிறது,'' என, மண்டல அலுவலர் மணீஸ்வரராஜா தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: ஹஜ் கமிட்டியின் அறிவிப்பின்படி ஜன., 14 முதல் ஹஜ் புனித யாத்திரைக்கான பதிவு துவங்குகிறது. ஹஜ் விண்ணப்பங்களை தங்கள் மாநிலங்களில் ஹஜ் கமிட்டியில் சமர்ப்பிக்க பிப்., 8 கடைசி நாள்.
2017 மார்ச் 10ம் தேதி வரை செல்லுபடியாகத்தக்க பாஸ்போர்ட் உடையவர்களிடம் மட்டுமே ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பங்களை கமிட்டியில் பெறப்படுகிறது.மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தால் யாத்திரை செல்லும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரியான ஆவணங்களுடன், போலீஸ் துறையின் விசாரணை அறிக்கை பெற்றதும், பரிசீலித்து விரைந்து பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடைசி நேர முயற்சியை தவிர்க்க மதுரை, திருநெல்வேலி பாஸ்போர்ட் சேவா கேந்திரங்களில் ஆன்லைன் ஏ.ஆர்.என்., படிவம் மற்றும் ஹஜ் செல்வதற்கான விண்ணப்பக் கடிதத்துடன் விண்ணப்பிக்கலாம். இதற்காக தனி கவுன்டர் செயல்படுகிறது, என்றார்.
