Published On: Sunday, January 10, 2016
முஸ்லிம் சிறைவாசிகள், உட்பட அனைத்து வாழ்நாள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யக் கோரி மனிதநேய மக்கள் கட்சி சென்னை, மதுரை மற்றும் கோவையில் ஆர்ப்பாட்டம்
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் அறிக்கை:மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழுக் கூட்டம் ஜனவரி 7ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பாரத் ரத்னா எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்த நூற்றாண்டையொட்டி தமிழக சிறைகளில் 10ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் உட்பட அனைத்து ஆயுள் தண்டனைக் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரி வரும் பிப்ரவரி 7 அன்று சென்னை, மதுரை மற்றும் கோவையில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய எழுவரின் விடுதலை தொடர்பாக சென்ற 2015 டிசம்பர் 2ஆம் நாள் இந்திய உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிமான்கள் அடங்கிய முழு அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பில் அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 161 மாநில ஆளுநருக்கு வழங்கும் அறுதி அதிகாரத்தில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பரிந்துரைப்படியே மாநில ஆளுநர் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த இயலும் என்பதை ஏற்கெனவே நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
எனவே 10 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் மற்றும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட தமிழக சிறையில் உள்ள அனைத்து வாழ்நாள் தண்டனைக் கைதிகளையும் தமிழக அரசு அரசியலமைச் சட்டத்தின் உறுப்பு 161ஐ பயன்படுத்தி பாரத் ரத்னா எம்.ஜி.ஆர். பிறந்த நூற்றாண்டையொட்டி விடுதலை செய்யக் கோரி ‘கோரிக்கை ஆர்ப்பாட்டம்’ நடத்தப்படும்.என்று எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
(திருச்சி - சாஹுல் ஹமீட்)



