Published On: Monday, January 11, 2016
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை எதிர்த்து விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட தரப்பினரால் உச்ச நீதிமன்றத்தில் (திங்கள்கிழமை) வழக்கு தொடரப்பட்டது.
மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து அறிவிக்கை வெளியிட்டது சட்ட விரோதம் எனறும், ஜல்லிக்கட்டு நடத்த உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.இந்த வழக்கை உடனடியாக விசாரணைக்கு ஏற்கக் கோரிய விலங்குகள் நல வாரியம், பெடா (PETA) அமைப்பு உள்ளிட்ட தரப்பினரின் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் நாளை (செவ்வாய்க்கிழமை) விசாரிக்க ஒப்புக்கொண்டார்.
"ஜல்லிக்கட்டு ஒரு ரத்தவெறி விளையாட்டு. அதில், விலங்குக்கு மிகப் பெரிய வலியும் அழுத்தமும் உண்டாக்கப்படுகிறது. தமிழ்ப் பண்பாடு என்ற பெயரில் காளைகளைக் கொடுமைப்படுத்த அனுமதிக்கக் கூடாது" என்று தமது மனுவில் விலங்குகள் நல வாரியம் குறிப்பிட்டுள்ளது.முன்னதாக, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வந்தது. இப்போட்டியின்போது காளைகள் வதைக்கப்படுவதாகக் கூறி, இப்போட்டிக்கு தடை விதிக்க கோரி விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 7-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது. இதனால், ஜல்லிக்கட்டுக்குப் பிரசித்தி பெற்ற மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந் தாண்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை.இதன் காரணமாக, காளைகளை வளர்ப்போர், காளைகளை அடக்கும் வீரர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் அதிருப்தி அடைந்தனர். ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். இதற்காக நாடாளுமன்றத்தில் சிறப்பு சட்டம் அல்லது அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், ஜல்லிக்கட்டு பேரவை குழுவினர் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தினர். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தி வந்தார்.
தமிழக அரசு கேவியட் மனு: இதன் தொடர்ச்சியாக, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை எதிர்த்து யாராவது வழக்கு தொடர்ந்தால், தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நேற்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில் "மத்திய அரசின் அறிவிக்கையை எதிர்த்து யாராவது வழக்கு தொடர்ந்தால் அவ்வழக்கில் தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது" என்று கோரப்பட்டிருந்தது.இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.
