Published On: Monday, January 11, 2016
இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து
ஜனவரி 15ம் தேதி இஸ்லாமாபத்தில் நடைபெறவிருந்த இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. பதன்கோட் தாக்குதலில் நடவடிக்கை எடுக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது என்றும் பாகிஸ்தான் நடவடிக்கை திருப்தி அளித்தால் மட்டுமே மீண்டும் பேச்சுவார்த்தை தொடருவோம் என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் பிரதமர் மோடி ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லி திரும்பும் வழியில், பாகிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். லாகூர் நகரில் அவர், பிரதமர் நவாஸ் ஷெரீப்பையும் சந்தித்தார். இதைத்தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சுவார்த்தை 15-ந் தேதி இஸ்லாமபாத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பதான்கோட் விமானப் படைத் தளத்தை குறிவைத்து, பயங்கரவாதிகள் அந்தத் தளத்துக்குள் நுழைந்து கொடூர தாக்குதல் நடத்தினர். அவர்களது தாக்குதலை முறியடிக்கும் வகையில், பாதுகாப்புப் படையினர் தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்பினருக்கும் இடையே 3 நாள்கள் நீடித்த சண்டையில் பாதுகாப்புப் படையினர் 7 பேரும், 6 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.இதையடுத்து பதான்கோட் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதைப் பொருத்தே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வரும் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தியா-பாகிஸ்தான் இடையேயான வெளியுறவுத்துறை செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது. இந்த தகவலை திங்கட்கிழமை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார். பதன்கோட் சம்பவத்துக்கு பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் வரை பேச்சுவார்த்தை கிடையாது எனவும், பதன்கோட் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தான் நடவடிக்கை திருப்தி அளிக்கும் வரை அமைதி பேச்சுவார்த்தை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
