Published On: Thursday, January 21, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுக்குள் கலந்து ஆலோசித்து அரசியல் யாப்பு யோசனையை முன்வைக்காது
தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுக்குள் கலந்து ஆலோசித்து அரசியல் யாப்பு யோசனையை முன்வைக்காது தமிழ் மக்களுடைய கருத்துக்களை பெற்று அதனடிப்படையில் அரசியல் யாப்பு யோசனைகளை முன்வைக்க வேண்டும் என அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
வாழைச்சேனை கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்!
“நாட்டில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டும் சூழ்நிலையில் இணைந்த வடகிழக்கில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை உள்ளடக்கிய சமஷ்டி முறையிலான தீர்வினை தமிழ் மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்துகிறார்கள். ஆனால் இதனை சிங்கள கடும் போக்காளர்கள் எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
கடந்த ஆட்சியில் பொதுபலசேன மற்றும் சிங்கள ராவய போன்ற சிங்கள இனவாத அமைப்புகள் செய்த எதிர்ப்பு நடவடிக்கைகளை தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ செய்கிறார். ஒரு ஜனாதிபதி தனது பதவியையிழந்தால் அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும்.
ஆனால் முன்னாள் ஜனாதிபதி வட கிழக்கை இணைக்க விடமாட்டேன் சமஷ்டி முறையிலான தீர்வு வழங்க முடியாது எனக் கூறிக்கொண்டு சிங்கள மக்கள் மத்தியில் இனவாத கருத்தை கூறி தனது அரசியலைப் பலப்படுத்த முற்படுகிறார். இவர்கள் எல்லாவற்றையும் எதிர்க்கும் சூழ்நிலையில் தமிழ் மக்களுக்கு எவ்வாறான தீர்வுத் திட்டத்தை முன்வைக்க முடியும்.
புதிய அரசியலமைப்பு சபைக்கு முன்வைக்கப்படும் யோசனையை தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் கட்சி உறுப்பினர்களும் கூடி முடிவெடுத்தால் போதாது மாவட்டம், பிரதேசம், கிராமங்கள் என்ற அடிப்படையில் மக்களைச் சந்தித்து புத்திஜீவிகள், கல்விமான்கள், சமூக சமய தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடைய கருத்துக்களை பெற்று அரசியல் யாப்பு யோசனையை முன்வைக்க வேண்டும்.
இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் 21ம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கிளிநெச்சியில் கூடி ஆராயவுள்ளது. 22ஆந் திகதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெறவுள்ளது இக்கூட்டங்களில் கட்சித் தலைமையிடம் இதுகுறித்து வலியுறுத்தவுள்ளேன்” என்றும் கூறினார்;.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்