Published On: Monday, January 04, 2016
சேவைகளின் மூலம் மக்களின் மனங்களில் இடம் பிடித்த ஒரு அரசியல் தலைமை ஐ.ஏ. ஹமீட்
தனது சேவைகளின் மூலம் மக்களின் மனங்களில் இடம் பிடித்த ஒரு அரசியல் தலைமையான கல்முனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஐ.ஏ.ஹமீடின் மறைவு எம்மக்களுக்கு பேரிழப்பாகும்; என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அவ் அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபினால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட ஹமீட் கல்முனை பிரதேச சபையின் முதலாவது தவிசாளராகவும் கட்சியின் உயர்பீட உறுப்பினராகவும் இருந்து செயற்பட்டார்.
ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃபின் கட்டளையை ஏற்று கல்முனை பிரதேச சபையின் தவிசாளர் பதவியினை ராஜினாமா செய்ததன் மூலம் தலைவரினதும், கட்சியினதும் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக நிகழ்ந்தார்.
2001ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நான் களமிரங்கிய போது எனது வெற்றிக்காக உழைத்தவர். தனது சேவைகளின் மூலம் மருதமுனை மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் ஒரு அரசியல் தலைமை. கல்முனை அபிவிருத்திற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்.
பல அரச நிறுவனங்களின் தவிசாளர் பதவிகளையும் அலங்கரித்தவர். அரசியல் தலைமைகளுடனும், மக்களுடனும் நல்ல பரஸ்பர உறவுடன் செயற்பட்டவர்.
அன்னாரின் மறைவினால் துயர்பட்டிருக்கும் மருதமுனை மக்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
(ஹாசிப் யாஸீன்)
