Published On: Monday, January 04, 2016
வடகிழக்கு இந்தியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திங்கட்கிழமை காலையில் வடகிழக்கு இந்தியா, மியான்மர், வங்காளதேசம் மற்றும் பூட்டானை உள்ளடங்கிய பகுதிகளில் 6.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது.இம்பாலுக்கு மேற்கே 29 கிலோ மீட்டர் தொலைவில் 57 கிலோ மீட்டர் ஆழத்தில்,திங்கட்கிழமை காலை 4:35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. மணிப்பூர் தலைநகர் இம்பாலில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தது. பெரும்பாலான கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது.
காலையில் நிலநடுக்கம் ஏற்பட்டதும், மக்கள் பீதியில் அலறியடித்து அவர்கள் வீடுகளை விட்டு ஓடினர். தாமெங்லாங் பகுதியில் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து உள்ளது. இம்பாலிலும் கட்டிடங்கள் இடிந்து விழுந்து உள்ளது. மார்க்கெட் பகுதிகளிலும் கட்டிடங்கள் இடிந்து உள்ளது.
சில கட்டிடங்கள் முற்றிலுமாக இடிந்துவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகியது. மேற்கு வங்காளம் ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. ”இம்பாலில் நாங்கள் உணர்ந்த நிலநடுக்கம் மிகவும் பெரியது,” என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மணிப்பூரில் நிலநடுக்கத்திற்கு 5 பேர் உயிரிழந்தனர் என்றும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர்.
“இம்பாலில் இதுவரையில் நிலநடுக்கத்திற்கு 6 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் 33 பேர் காயம் அடைந்து உள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. இம்பாலில் கட்டிடங்கள் இடிந்து உள்ளது, குடியிருப்பு கட்டிடங்கள், அரசு அலுவலகங்கள் இடிந்து உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது,” என்று தேசிய பேரிடர் மேலாண்மை படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து தேசிய பேரிடர் மேலாண்மை படை மீட்பு பணிக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பட்டது. தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மணிப்பூர், அசாம், திரிபுரா, மிசோரம், மேகலயா, சிக்கிம், நகாலாந்து மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் உள்ள கட்டுபாட்டு அறைகளுடன் தேசிய பேரிடர் மேலாண்மை படை பேசிஉள்ளது.”மணிப்பூர் மற்றும் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிற மாநிலங்களுக்கும் மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்,” என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார்.
வடகிழக்கு இந்தியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் அசாம் மாநிலத்தில் 20 பேர் காயம் அடைந்து உள்ளனர். அசாமிலும் கட்டிடங்கள் சேதம் அடைந்துஉள்ளது. பல்வேறு கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னரும், மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகிஉள்ளது.

