Published On: Wednesday, March 09, 2016
அரசியலில் தூரநோக்கோடு செயற்படக்கூடியவர் பிரதி அமைச்சர் ஹரீஸ் - மாகாண சபை உறுப்பினர் லாகிர்
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தைரியமாக குரல் கொடுக்கும் ஒரு தலைமையாக பிரதி அமைச்சர் ஹரீஸ் செயற்படுகிறார்; என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம்.லாகிர் தெரிவித்தார்.
மூதூர் பிரதேச விளையாட்டுத்துறை அபிவிருத்தி, மைதான அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டுக்கு இப்பிரதேச மக்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் ஞாயிற்றுக்கிழமை (07) மூதூருக்கு விஜயம் செய்தார்.
இதன்போது முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழு உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகளின் சந்திப்பு மூதூர் பால நகர் முஸ்லிம் காங்கிரஸின் பிராந்திய காரியாலயத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்,
மூதூர் மக்களுக்கும் பிரதி அமைச்சர் ஹரீஸ_க்குமிடையே நெருங்கிய தொடர்புள்ளது. இதனை மூதூர் மக்கள் என்றும் மறந்திருக்கமாட்டார்கள் என நினைக்கின்றேன். நாட்டில் நிலவிய பயங்கரவாத காலப்பகுதில் 2002ம் ஆண்டு இரவோடு இரவாக மூதூர் பிரதேசம் விடுதலைப் புலிகளால் சுற்றுவளைக்கப்பட்டபோது எமது மக்களை பாதுகாப்பதற்காக அன்றைய தினம் பிரதி அமைச்சர் ஹரீஸ் களத்தில் நின்று இளைஞர்களுக்கு தைரியமூட்டி உரிய பாதுகாப்பினை வழங்கி எமது மக்களை பாதுகாத்தவர். இதன் மூலம் அவரின் தைரியம், ஆளுமை, சமூகத்தின் மீதுள்ள பற்று என்பவற்றை எங்களால் காணக்கூடியதாகயிருந்தது.
நாட்டில் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் கடந்த ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாத அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட அச்சுறுத்தலுக்கு எதிராகவும், அளுத்கம தாக்குதல் சம்பவத்ததிற்கு எதிராகவும் பிரதி அமைச்சர் ஹரீஸ் மிக தைரியமாக செயற்பட்ட செயல் வீரன். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு, உரிமை சார்ந்த விடயத்தில் அஞ்சமின்றி தைரியமாக எங்கும் பேசக்கூடிய வல்லமையுள்ளவர். தான் முன்னெடுக்கின்ற விடயங்களை நேர்த்தியாக செய்து முடிக்கக்கூடியவர். அரசியலில் தூரநோக்கோடு சிந்தித்து செயற்படக்கூடிய இளம் தலைவராக இன்று அவர் எம்மத்தியில் காணப்படுகின்றார்.
இவரின் இவ்வாறான செயற்பாடுகளுக்கான அங்கீகாரமே கட்சியின் பிரதித் தலைவராக, பிரதி அமைச்சராக இன்று அவர் பதவி வகிக்கின்றமையாகும். இதன்மூலம் எமது பிரதேச மக்களுக்கும் சிறந்த முறையில் சேவையாற்றுவார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது என்றார்.
(ஹாசிப் யாஸீன், எம்.எம்.ஜபீர்)