Published On: Wednesday, March 09, 2016
ஞானக் கடலோசை
18ம் நூற்றாண்டு காலத்தில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்து இஸ்லாமியப் பிரச்சாரங்களில் ஈடுபட்ட, அல்லாஹ்விடத்தில் ஞான அருள் பெற்ற சங்கை மிகு மகான் அப்துல் காதர் நாகூர் மீராசாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வாழ்க்கை வரலாறுகள், அற்புத நிகழ்வுகள் போன்ற விடயங்களை உள்ளடக்கி ரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்டுள்ள ~ ஞானக் கடலோசை | என்ற நூல் தெளிவான, ஆதாரபூர்வமான சம்பவங்களை விளக்கிக் கூறுகின்றது.
அன்பு, பரிவு, நேசம், இணக்கம் என்ற மனிதப் பண்புகளின் வெளிப்பாடுகளால் மக்களுடன் தம்மை இணைத்துக் கொண்டு பல சீர்திருத்தங்களை, இஸ்லாமியக் கடமைகள், வாழ்க்கை முறைகளை அக்கால மக்களுக்கு தமது பிரச்சாரங்கள் வாயிலாக அமைத்துக் கொடுத்த சற்குணப் பெரியார் சாஹ{ல் ஹமீது வலியுல்லாஹ் அவர்கள் இலங்கையின் பல பாகங்களுக்குச் சென்றுள்ளதோடு, கல்முனையிலும் பல நாட்கள் தங்கியிருந்து இன, மத பேதங்களுக்கு அப்பால் தம்மை நாடி வந்த மக்களுக்கு உபதேசங்கள், வைத்தியங்கள், தியானத்தின் சிறப்புக்களை அள்ளி வழங்கியுள்ளார். அதனால் இப் பெரியார் முஸ்லீம் மக்களால் மட்டுமன்றி ஏனைய மதத்தவர்களாலும் போற்றிப் புகழப்படுகின்றார்கள்.
கடந்த வருடம் ஜமாத்துல் ஆகிர் முதற்பிறை ஆரம்பிக்கும் தினத்தில் மௌலவிமார்களான மதிப்புக்குரிய அல்ஹாஜ் PMA. ஜலீல் ( பாக்கவி ), அல்ஹாஜ் யுசு சபா முஹம்மத் ( நஜாஹி ) ஆகியோர்களால் சிறப்புரை, மதிப்புரைகளை வழங்கி வெளியிட்டு வைக்கப்பட்ட ~ ஞானக்கடலோசை ’ நூலை வாசித்து , இது எமது இலங்கை நாட்டில் நாகூர் மீராசாஹிப் வலியுல்லாஹ் பற்றி எழுதப்பட்டுள்ள முதல் நூலாகவும், சிறப்பாக இருப்பதாகவும் பலர் பாராட்டுக்களையும், நன்றிகளையும் நூலாசிரியருக்கு கூறுகின்றார்கள்.
இன்ஷா அல்லாஹ் இவ்வருடம் ஹிஜ்ரி 1437 ஜமாத்துல் ஆகிர் மாதம் முதற் பிறையன்று அதாவது 10.03.2016 அன்று கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் தர்ஹாவில், தேசிய விழாவாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாகூர் மீராசாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் ஞாபகார்த்த மாபெரும் கொடியேற்று விழா ஆரம்பித்து தொடர்ந்து பன்னிரண்டு நாட்களுக்கு நடைபெற இருப்பது விஷேடமாகும். இந் நாட்களில் மௌலீது மனாகிப், பயான்களும் நடைபெற இருப்பது குறிப்பிடத் தக்கது.