Published On: Wednesday, March 16, 2016
நண்பர்களுக்கிடையில் மோதல் - தடுக்க சென்ற தாயார் பலி
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் நண்பர்களுக்கிடையிலான மோதலை விலக்க சென்ற 65 வயதுடைய பெண் ஒருவர் தாக்குதலுக்கு இழக்காகி நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 14.03.2016 அன்று இரவு உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இத்தோட்டத்தை சேர்ந்த ஒருவர் தலவாக்கலை பொலிஸாரால் 16.03.2016 அன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த மாதம் 24ம் திகதி மாலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில் இரு நண்பர்கள் மது அருந்திவிட்டு வாய் தர்க்கம் ஒன்றில் ஈடுப்பட்டமை கைகலப்பில் முடிந்துள்ளது.
இத் தோட்டத்தில் தொடர் வீட்டு குடியிருப்பில் பக்கம் பக்கமாக இருக்கும் இந்த நண்பர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலை தவிர்ப்பதற்காக மோதலில் ஈடுப்பட்டுள்ள ஒருவரின் தாயார் இதனை தடுக்க முற்பட்டுள்ளார்.
இதில் தாயாரின் கையில் காயம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதேவேளை குறித்த தாயார் இந்த நண்பர்களுக்கிடையில் சிக்குண்டு தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளார்.
இதனையடுத்து குறித்த தாயார் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்த பின் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு தினங்களில் மீண்டும் வீடு திரும்பியுள்ளார். அதன்பின் வீடு திரும்பிய இவர் தாக்குதலில் ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மீண்டும் வைத்தியசாலையில் கடந்த 14ம் திகதி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அனுமதிக்கப்பட்ட இவர் 14.03.2016 அன்று இரவு உயிரிழந்துள்ளார். இவரின் மரண விசாரணை 15.03.2016 அன்று நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆர்.குடாகமவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் குறித்த தாயாரின் வயிற்றில் குடல் பகுதி வெடித்து காணப்பட்டதை உணர்ந்த மரண விசாரணை அதிகாரி இது கொலையாக இருக்கலாம் என சந்தேகத்து இது தொடர்பாக தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து தலவாக்கலை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் தாக்குதலில் ஈடுப்பட்ட பிரிதொரு நபரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவர். இவர் உயிரிழந்த பெண்ணின் வயிற்றில் உதைத்ததாக உயிரிழந்த பெண் முன்னரே தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்ததை அடிப்படையாக கொண்டு இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரை பொலிஸ் விசாரணையின் பின் 16.03.2016 அன்று மாலை நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்போவதாக விசாரணையை மேற்கொள்ளும் தலவாக்கலை குற்றதடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
(க.கிஷாந்தன்)