Published On: Friday, August 28, 2015
இலங்கையில் காணாமல்போன தமிழர்களை மீட்க வலியுறுத்தி வரும் 31-ம் தேதி சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் காணாமல்போன தமிழர்களை மீட்க வலியுறுத்தி வரும் 31-ம் தேதி சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காணாமல் போனவர்கள் என்ற கணக்கில் உலகில் இரண்டாம் இடம் வகிப்பது இலங்கைதான். (முதலிடம்: இராக்).காணாமல் போனவர்கள் என்றால் திருவிழாவில் தொலைந்து போவது போல் தற்செயலாகக் காணாமல் போனவர்கள் என்று எண்ணி விட வேண்டாம். இவர்கள் காவல் துறையினராலோ ராணுவத்தினராலோ பிடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போனவர்கள், அதாவது காணாமலடிக்கப்பட்டவர்கள்.இவர் கள் பெரும்பாலும் கொல்லப்பட்டிருக்கலாம், அல்லது ரகசியச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம்.
காணாமல் போனவர்கள் பலரும் ரகசியச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு அடிமைகளாய் வேலைவாங்கப்படுவதாகத் தமக்கு ரகசியத் தகவல் கிடைத்திருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறுகிறார்.ஆகஸ்டு 30 இந்த நாள் சர்வதேச காணாமல் போனவர்கள் நாள் என உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. காணாமல் போனவர்களின் உலகுதழுவிய போராட்டத்தில் தமிழகத் தமிழர்களாகிய நாமும் தோழமை கொள்வோம்!தமிழினம் தன் இறைமையைத் தொலைத்ததால் ஆயிரக்கணக்கில் நம் மக்களைத் தொலைத்து நிற்கிறோம் என்ற உண்மையை இந்த நாளில் நினைவில் நிறுத்துவோம்! ஈழத் தமிழர் இனக்கொலைக்கு நீதி கோரும் போராட்டத்தை உறுதியுடன் முன்னெடுக்க உறுதியேற்போம்" என வேல்முருகன் கூறியுள்ளார்.