Published On: Tuesday, August 25, 2015
தொழிலுக்கு சென்ற இரண்டு மகன்களை காணவில்லை
தொழிலுக்கு சென்ற இரண்டு மகன்களை காணவில்லை, மற்றைய மகன் தொழில் விட்டு வரும் போது சுட்டுக் கொண்டார்கள் நான் தற்போது மூன்று பிள்ளைகள் இன்றி வாழ்கின்றேன் என கண்ணீருடன் வாழைச்சேனை புதுக்குடியிருப்பை சேர்ந்த எஸ்.யோகமலர் என்னும் தாயார் தெரிவித்தார்.
காணாமல் போனோர்களை கண்டறியும் ஜனாபதி ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்காக மூன்றாவது அமர்வின் மூன்றாள் நாள் விசாரணை வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு யோகமலர் என்னும் தாயார் மேலும் தெரிவிக்கையில்!
எனது மூன்று மகன்கள் இல்லாமல் போய் விட்டனர். ஒரு மகன் வாகரை கண்டலடியில் மீன்பிடியில் ஈடுபட்டு வந்தவர். 1994ம் ஆண்டு காணாமல் போனார், யார் கடத்திக் கொண்டு சென்றார்கள் என்பது தெரியாது. அக்காலப் பகுதியில் இராணுவத்தினரும், விடுதலைப் புலிகளும் இருந்தார். யார் கொண்டு போனார்கள் என்று தெரியாது.
இதுவரையில் அவர் தொடர்பான தகவல்கள் தெரியவில்லை. மற்றைய மகன் கண்டலடி தரவைப் பகுதியில் வயல் வேலை செய்து கொண்டிருந்த போது காணாமல் போனார். அவருக்கு இதுவரையில் என்ன நடந்தது என்பது கூட தெரியாத நிலையே இருக்கின்றது.
இதுவரையில் நான் பொலிஸ் நிலையத்திலும் முறையிடவில்லை. மரணச் சான்றிதழும் பெறவில்லை. எனது மூன்றாவது மகன் 2006ம் ஆண்டு புதுக்குடியிருப்பில் உள்ள ஸ்ரூடியோவில் வேலை செய்து விட்டு வரும் போது இனந்தெரியாதவர்களினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நான் மூன்று மகன்களை இழந்து நிற்கின்றேன். நான் கண்ணீரோடும், துன்பத்தோடுமே எனது காலத்தினை கழித்து வருகின்றேன். எனக்கு ஒரு நல்ல முடிவினை இந்த ஆணைக்குழு பெற்றுக் கொடுக்க வேண்டும். இங்கு வந்துள்ளவர்கள் பலர் மகனை, கணவனை தொலைத்தவர்களும், கடத்தப்பட்டவர்களும் வந்துள்ளார்கள் அவர்களுக்கும் நல்ல முடிவினை பெற்றுக் கொடுக்க வேண்டும்.
என்னைப்போல் எத்தனை தாய்மார்கள் உள்ளார்கள். அவர்களுக்கு இந்த ஆணைக்குழு சிறந்த தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என நம்பியே வந்துள்ளேன். நான் மூன்று பேரை இழந்துள்ளேன். நான் மட்டும் இழக்கவில்லை. இன்று எத்தனையோ பேர் இங்கு வந்துள்ளார்கள். கண்ணீரோடும் துன்பத்தோடும் உள்ளார்கள்.
கடத்திச் செல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என இனந்தெரியாதவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக மக்கள் வேதனையுடனும் கண்ணீருடன் வாழ்கின்றனர்.
அவர்களுக்கு காணாமல் போனோர்களை கண்டறியும் ஜனாபதி ஆணைக்குழுவின் மூலம் நல்ல முடிவு வரும் என்றே வந்துள்ளதாக மூன்று மகன்மார்களை இழந்த வாழைச்சேனை புதுக்குடியிருப்பை சேர்ந்த யோகமலர் என்னும் தாயார் மேலும் தெரிவித்தார்.
திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை நடைபெற்ற அமர்வில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் சுமார் 175 பேர் சாட்சியங்களை அளித்தனர்.
இதன்போது வாழைச்சேனை பிரதேச செயலகம், வாகரை பிரதேச செயலகம், ஓட்டமாவடி பிரதேச செயலகம், ஓட்டமாவடி மத்தி பிரதேச செயலகம், கிரான் பிரதேச செயலகம் என ஐந்து செயலங்களைச் சேர்ந்த 225 பேருக்கு அமர்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இனந்தெரியாவர்களினால் கடத்திச் செல்லப்பட்டவர்களினதும், காணாமல் போனவர்களினதும் குடும்பங்கள் தினமும் வேதனையுடனும், கண்ணீருடனும் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.