Published On: Wednesday, September 02, 2015
2016–ல் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி
தமிழக முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது அரசு வக்கீல் ஆறுமுகம் கோவை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக திண்டுக்கல் லியோனி புதன்கிழமை கோவை முதன்மை செசன்சு நீதிமன்றத்தில் ஆஜரானா ர். வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியண்ணன் அடுத்த மாதம் 14–ந் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
கோர்ட்டில் இருந்து வெளியே வந்த திண்டுக்கல் லியோனி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த ஆண்டு கருணாநிதியின் பிறந்த நாள் விழாவில் பீளமேட்டில் நடந்த கூட்டத்தில் கருணாநிதி ஆட்சியில் நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு கிடைத்ததையும், தற்போதுள்ள ஜெயலலிதா அரசு மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்காததை பற்றியும் பேசினேன். இதற்கு என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர். இது முற்றிலும் பொய்யான வழக்கு. இதுபோன்று எத்தனை பொய் வழக்குபோட்டாலும் சந்திக்க தயார். 2016–ல் தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி. அதற்காக பணிகளை தி.மு.க. தொண்டர்கள் தொடங்கி விட்டனர். மக்களும் தி.மு.க.வை ஆதரிக்கிறார்கள் என்றார்.