Published On: Wednesday, September 16, 2015
கிழக்கின் எழுச்சி மாபெரும் விவசாயக் கண்காட்சி
கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிழக்கின் எழுச்சி மாபெரும் விவசாயக் கண்காட்சி தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு மட்டக்களப்பு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது. இதில் அமைச்சின் செயலாளர், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் உட்பட அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களின் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
எதிர்வரும் 17, 18, 19ம் திகதிகளில் மட்டக்களப்பு சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மாகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ள கிழக்கின் எழுச்சி 2015 மாபெரும் விவசாயக் கண்காட்சியும் விற்பனையும் நிகழ்வு தொடர்பில் தெளிவு படுத்தும் வகையில் இவ் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.
இவ் விவசாயக் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வு 17ம் திகதி காலை 09.30 மணிக்கு ஆரம்பமாவதுடன் முதல் நாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் கலந்து கொள்ளவுள்ளதுடன், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சா.வியாழேந்திரன், அலிசாகீர் மௌலானா மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான சி.சந்திரகாந்தன், இரா.துரைரெட்ணம், கோ.கருணாகரம் மற்றும் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் அபய குணவர்தன ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இறுதிநாள் நிகழ்வு 19ம் திகதி பிற்பகல் 03.00 மணிக்கு நடைபெறவுள்ளதுடன் இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக வடமாகாண விவசாய அமைச்சர் எஸ்.ஐங்கநேசன் கலந்து கொள்ளவுள்ளதுடன், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண சபை பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.சுபைர். மா.நடராசா எஸ்.கிருஸ்ணபிள்ளை, எஸ்.சிப்லி பாறூக் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இக்கண்காட்சியில் விவசாயம் தொடர்பான விடயங்கள் மாத்திரம் அல்லாமல் இவ்வமைச்சின் கீழ் உள்ள நீர்ப்பாசனம், கூட்டுறவு அபிவிருத்தி, மீன்பிடி, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, உணவு வழங்கல் போன்றன தொடர்பாகவும் மக்களுக்கு பயன் பெறும் வகையில் பல செயற்பாடுகள் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் மேற்கூறப்பட்டன தொடர்பில் மக்களுக்கு விழிப்புனர்வூட்டும் செயற்திட்டங்களும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
(வாழைச்சேனை நிருபர்)