Published On: Tuesday, March 12, 2013
பங்களாதேஷ் - இலங்கை முதலாவது டெஸ்ட் : சமநிலையில் முடிவு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.
கடந்த எட்டாம் திகதி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான இந்தப் போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 570 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தனது முதல் இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் லகிரு த்ரிமானே (155), குமார் சங்கக்கார (142) மற்றும் தினேஷ் சந்திமால் (166) ஆகியோர் சதங்களை விலாசி சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய பங்களாதேஷ் அணி சார்பில், அதிரடியாக ஆடிய அணித் தலைவரும் விக்கெட் காப்பாளருமான ரஹீம் 200 ஓட்டங்களைப் பெற்றார்.
இதன் மூலம் இவர் டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது இரட்டைச் சதத்தை பதிவு செய்ததோடு, பங்களாதேஷூக்காக இரட்டைச்சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்திக் கொண்டார்.
அத்துடன் முகமது அஷ்ரபுல் 190 ஒட்டங்களையும், நசீர் ஹுசைன் 100 ஓட்டங்களையும் விலாசினார்.
இதன்படி பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் சகலவிக்கெட்டுக்களையும் இழந்து 638 ஓட்டங்களைக் குவித்தது.
பங்களாதேஷ் 68 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்க, தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி 335 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்தநிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இடைநிறுத்திக்கொண்டது.
இதன்போது, அஞ்சலோ மெத்தியூஸ் 38ஓட்டங்களுடனும், லகிரு த்ரிமானோ 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இலங்கை அணி சார்பில் குமார் சங்கக்கார 105 ஓட்டங்களையும், திலகரத்ன டில்ஷான் 126 ஓட்டங்களையும் விளாசினர்.
பின்னர் 268 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் அணி 70 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் போட்டி சமநிலையில் முடிவதாக அறிவிக்கப்பட்டது.
பங்களாதேஷ் சார்பில் ஜாஹிருல் இஸ்லாம் 41 ஓட்டங்களுடனும், முகமது அஸ்ரபுல் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக பங்களாதேஷ் அணித் தலைவர் ரஹீம் தெரிவுசெய்யப்பட்டார்.