Published On: Thursday, March 21, 2013
முஸ்லிம்களது பள்ளிவாசல்கள் சமாதான சகவாழ்வையே போதிக்கின்றன

இலங்கை வாழ் முஸ்லிம்கள் இந்த நாட்டை இஸ்லாமியப்படுத்தி வருவதாகவும் அதன் ஒரு அங்கமாக அதிகமான பள்ளி வாயல்களை நிர்மாணித்து வருவதாகவும் ஒரு சில மதவாத அமைப்புக்கள் பிரச்சாரம் செய்து வருவதோடு பலவேறு இடங்களில் பள்ளி வாயல்களை மூடிவிடுமாறு அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
அதே போன்று இன்னுமொருபடி மேலே சென்று முஸ்லிம்களது பள்ளிவாயல்களில் இஸ்லாமிய அடிப்படை வாதமும் தீவிரவாதமும் போதிக்கப் படுவதாகவும் அபாண்டமாக குற்றம் சுமத்தியுள்ளனர்.
உண்மையில் மேற்படி குற்றச்சசாட்டுக்கள் அடிப்படையற்றவையாகும், முஸ்லிம்களைப் பொருத்தவரை இஸ்லாம் கூட்டு சமூக சமாதான சகவாழ்வை வலியுறுத்துகின்ற ஒரு மார்க்கமாகும், பள்ளிவாயல்கள் முஸ்லிம்களது வணக்கஸ்தலங்களாக மாத்திரமன்றி வாழ்வின் சகல் துறைகளிலும் முஸ்லிம் சமூகத்தினை வழி நடாத்துகின்ற சமூக மையங்களுமாகும்.
அடுத்த மதங்களில் போலன்றி முஸ்லிம்களுக்கு தினமும் ஐந்து வேளை தொழுவதும் அதிலும் கூட்டாக தொழுவதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளதால் முஸ்லிம்கள் தமது வாழ்விடங்களில் பள்ளிவாயல்களை அமைத்துக் கொள்கின்றனர் அல்லது பள்ளிவாயல்களை அண்டிய பிரதேசங்களில் குடியேறுகின்றனர்.
இவ்வாறு நாடு முழுவதும் சிறு சிறு கிராமங்களில் சிங்கள தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் அவர்கள் பரந்து பட்ட குடியிருப்புக்களை கொண்டிருப்பதால் அவர்களது வணக்கஸ்தளங்களின் எண்ணிக்கை அதிகரித்தாற் போல் அடுத்தவர்களுக்கு தெரிகின்றது.
அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகைகளுக்காக ஒரு ஊரில் ஓரிரு பள்ளிகளை கொடிருந்தாலும் ஒரு சில "தக்கியா" அல்லது "ஸாவியா" எனப்படும் மிகச் சிறிய வழிபாட்டுத்தல ங்களை தமத்கு வாழ்விடங்களில் அமைத்துக் கொள்கின்றனர்.
உதாரணமாக கொழும்பு மாநகர எல்லைக்குள் வசிக்கும் சுமார் இரண்டு இலட்சம் முஸ்லிம்களுக்கும் 28 ஜும்மாப் பள்ளிகள் மாத்திரமே இருக்கின்றன ஏனைய 51 வழி பாட்டுத் தலங்களும் மிகச் செறிவான வதிவிடங்களில் அமைக்கப் பட்டுள்ள சிறிய சிறிய தக்கியாக்களும் சாவியாக்க்களுமாகும்.
ஆயிரம் வருடங்களுக்கு மேல் அடுத்த சமூகங்களோடு நல்லுறவைப் பேணி முஸ்லிம்கள் சமாதான சகவாழ்வை நேசிக்கின்ற நற்பிரஜைகளாக இருப்பதற்கும் பெரும் பாலும் பஞ்சமா பாதகங்களில் இருந்து விலகி நடப்பதற்கும் இந்த பள்ளி வாயல்கள் பெரும் பங்களிப்பினை செய்து வருகின்றன.
வரலாற்றில் எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் முஸ்லிம் மார்க்க அறிஞர்களோ பள்ளிவாயல்களோ அடிப்படைவாத தீவிரவாத சிந்தனைகளை இந்த நாட்டு முஸ்லிம்களிடம் திணிக்க்கவுமில்லை, முஸ்லிமிளைஞர்கள் தவறான வழிகளில் செல்லவும் இல்லை.
அதேபோன்று இந்த நாட்டில் திட்டமிட்ட அடிப்படையில் அடுத்தவர்களை மதமாற்றம் நடவடிக்கைகளில் பள்ளிவாயல்கள் ஈடுபட்டதுமில்லை அதற்கான எந்தவிதமான சான்றுகளும் இதுவரை எந்த ஒரு தரப்பினாலும் முன்வைக்கப் படவில்லை.
இந்த நாட்டில் மத விழுமியங்களோடு முரண்படுகின்ற பல்லாயிரக்கணக்கான மதுபான விற்பனை நிலையங்கள் கள்ளுத் தவறணைகள் கணப் படுகின்றன அவற்றை தங்களதுஇனத்தினதும் கலாச்சாரத்தினதும் மதத்தினதும் அச்சுறுத்தலாக பார்க்க விரும்பாத பலர் முஸ்லிம்களது பள்ளி வாயல்கள் மாத்திரம் எந்த அடிப்படையில் தமது மத கலாச்சார விழுமியங்களுடன் முரண் படுகின்றன என்பதனை இதுவரை தர்க்க ரீதியாக சொல்ல வில்லை.
முஸ்லிம்கள் நாட்டின் பல பகுதிகளிலும் செறிந்து வாழ்ந்தாலும் அவர்களது விகிதாசாரத்திற்கு ஏற்ப காணி நிலங்களை பெற்றுக் கொள்வதில்லை, உதாரணமாக கிழக்கு மாகாணத்தில் சுமார் நாற்பது வீதமாகவுள்ள முஸ்லிம்கள் சுமார் 5% வீதமான நிலத்திலேயே வாழ்கிறார்கள். எனவே அவ்வாறான குறுகிய வதிவிடங்களுக்குள்ளேயே அவர்களது பள்ளிவாயல்களும் வரையறுக்கப் பட்ட இடப்பரப்பிலேயே அமைக்கப் பட்டுள்ளன.
பல இன ,பல மத, பல மொழி நாடான இலங்கையில் சகலருக்கும் தமது மத கலாச்சார உரிமைகளைப் பேணி நடப்பதற்குரிய பூரான உரிமை இருக்கின்றது என்பதனை போலியான குற்றச் சத்துக்களை முன்வைப்போர் தெரிந்து கொள்ள வேண்டும். பல நூற்றாண்டுகள் சமாதான சகவாழ்வை போதித்த முஸ்லிம் பள்ளிவாயல்கள் இன்றும் அதே அறப் பணியை மாத்திரமே செய்து கொண்டிருக்கின்றன.
-இனாமுல்லாஹ் மஷிஹுடீன்-