Published On: Tuesday, March 26, 2013
மனித எலும்புகள் இருப்பதாக தோண்டப்பட்ட இடத்தில் மாட்டின் எலும்புகள்

மட்டக்களப்பு, வாகரை பணிச்சங்கேணி பிரதேசத்தில் உள்ள தென்னம் தோட்டமொன்றில் மனித எச்சங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்ட தகவலையடுத்து வாழைச்சேனை நீதிமன்ற நீதிபதி எம்.எம்.றியாழ் முன்னிலையில் குழியானது தோண்டப்பட்டபோது மாட்டின் எழும்புக் கூடுகள் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டதாக வாகரை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித்த ஜெயரட்ன தெரிவித்தார்.
இதுபற்றி தெரிவிக்கப்படுவதாவது; கடந்த சனிக்கிழமையன்று வாகரை பனிச்சங்கேணியில் உல்லாச விடுதியொன்று அமைக்கப்படுவதற்கு அடித்தளமிடுவதற்காக தோண்டப்பட்ட மடுவில் காணப்பட்ட எழும்புகளை மனித எச்சங்கள் எனக்கருதி காணி உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். இதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸாரின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பின்னர் திங்கட்கிழமை மாலை நீதிபதி முன்னிலையில் தோண்டப்பட்டபோது குழியிலிருந்து மாட்டின் தலை மற்றும் எழும்புகளே காணப்பட்டன. ஏற்கனவே மனித எழும்புகள் காணப்படுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(லோகதக்சன்)