Published On: Wednesday, March 27, 2013
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு ஓர் திறந்த மடல்

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தவணை பரீட்சைகள் நடாத்தப்படுவதற்கான முஸ்தீபுகள் நடைபெற்றுவருகின்றன. பாடசாலை மட்டக் கணிப்பீடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு தவணைப் பரீட்சைகள் நடைபெறாது என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேல்மாகாணத்தில் தவணைப் பரீட்சை நடாத்திய அதிபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
ஒரு தெளிவில்லாத நிலையில் மீண்டும் தவணைப் பரீட்சைக்குள் பல பாடசாலைகள் விழுந்துள்ளன. பரீட்சைகளில் காணப்படும் குறைபாடுகளைக் களைவதற்காகவே பாடசாலை மட்டக்கணிப்பீடு அறிமுகம் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் போன்றோர் மதில்மேல் பூனைபோல் உள்ளனர். பரீட்சை நெருங்கிவிட்டால், கல்வி வியாபாரிகளான தனிநபர்களும், குழுக்களும் பாடசாலைக்குள் படையெடுக்கின்றனர்.
10-15 வீதம் தருகிறோம் எம்மிடம் பரீட்சைத் தாள்களைப் பெற்றுக்கொள்ளுங்கள் என சலுகைகளை அள்ளி வீசுகின்றனர் .இதில் பல பாடசாலைகள் வினாத்தாள்களின் தரத்தையோ மாணவர்களின் எதிர்காலத்தையோ பற்றி எவ்வித சிந்தனையுமின்றி குழியில் விழுந்துள்ளன.
இப்படியான பரீட்சைகளை நடாத்துவதன் முலம் சில தனிநபர்களும், குழுக்களும் பல இலட்சம் ரூபாய்களை ஒவ்வொரு தவணையிலும் பெற்றுக்கொள்கின்றனர். இவ்வாறான பரீட்சைத் தாள்களை மாகாணக் கல்விப் பணிமனை அல்லது வலயக் கல்விப் பணிமனைகள் தமது வளவாளர்களைக் கொண்டு தயாரித்து விநியோகிப்பதன் முலம் பெருந்தொகைப்பணத்தை வருமானமாக பெற்றுக்கொள்ளலாம். இப்பணத்தை கிழக்கு மாகாண மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஓவ்வொரு பாடசாலையும் விரும்பியவாறு விரும்பியவர்களிடமிருந்து வினாத்தாள்களைப் பெற்று பரீட்சை நடாத்துவதால் பரீட்சைத்தரத்தில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. சில பரீட்சை வினாத்தாள்கள் கடந்தகாலங்களில் நடாத்தப்பட்ட வினாத்தாள்களில் சிறு திருத்தத்துடன் வெளியாவதையும் அவதானிக்கலாம்.
இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு இவ்வாறு பரீட்சை நடாத்துவோரின் கல்வித்தகைமைகள், தொழிற்தகைமைகள் போன்றவற்றுடன் வினாத்தாள்களையும் திரட்டி பகுப்பாய்வு செய்வதுடன், இவ்வாறு பரீட்சை நடாத்த சட்டப்படி அங்கீகாரம் உள்ளதா? என்பதையும் பெற்றோர்களுக்கு ஊடகங்கள் வாயிலாகத் தெரியப்படுத்த முன்வரவேண்டும்.
இவ்வாறான பரீட்சைகள் நடாத்தமுடியுமென்றால் அவற்றை மாகாணக் கல்வி அமைச்சால் நடாத்துமாறு வேண்டிக்கொள்வதுடன், மாணவர்களிடம் அறவிடப்படும் பரீட்சைக் கட்டணங்களுக்கு பாடசாலையால் கட்டாயம் பற்றுச்சீட்டுக்கள் வழங்கப்படவேண்டும் என்பதையும் சுற்றுநிருபங்கள் முலம் வலியுறுத்துமாறும் பெற்றோர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.
(அபூஇல்மா)