Published On: Wednesday, March 13, 2013
இந்திய வீட்டுத் திட்டத்தின் 50 வீதமான வீடுகள் மட்டு மாவட்டத்தில்

கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியுடன் ஆரம்பிக்கப்படவுள்ள வீட்டுத் திட்டத்தில் 50 சதவீதமான வீடுகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்படவுள்ளது.
இம்மாகாணத்தில் இந்திய உதவியுடனான வீடமைப்புத் திட்டம் தொடர்பாக இலங்கைக்காக இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா உட்பட இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறன் அமைச்சர் பசீர் சேகுதாவூத் பிரதியமைச்சர்களான விநாயகமூர்த்தி முரளிதரன், எம்.எல்.ஏம்.ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, எம்.ரி.ஹஸன் அலி, பைஸல் ஹசிம், எச்.எம்.ஹரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டம் - 2000, அம்பாறை மாவட்டம் - 1000, திருகோணமலை மாவட்டம் - 1000 என மொத்தம் 4000 போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அமைத்துக் கொடுக்க இந்தியா முன்வந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 2000 வீடுகளில் 75 சதவீதமான வீடுகள் போருக்குப் பின்னர் விடுவிக்கப்பட்ட, போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களான போரதீவுப்பற்று, பட்டிப்ளை, வவுணதீவு, வாகரை, கிரான் மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அமையவிருப்பதாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; “வீடுகளைப் பெற தகுதியானவர்கள் தெரிவில் அரசியல் தலையீடுயின்றி உரிய நியதிகளின் அடிப்படையில் பிரதேச செயலகம் ஊடாக தெரிவுகள் இடம்பெற வேண்டும் என கலந்துரையாடலில் கலந்துகொண்ட சகலராலும் வலியுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்கட்டாக கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு என மூன்று தொகுதிகளிலும் தொகுதிக்கு 100 வீடுகள் என வீடுகள் அமையவுள்ளது. அடுத்த மாதம் மூன்றாம் வாரத்தில் இந்த வேலைகள் ஆரம்பிப்பது பற்றியும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டது என்றார்.
(த.லோகதக்சன்)