Published On: Saturday, March 30, 2013
நாளை பள்ளிவாசலை அற்றுமாறு பொதுபல சேனாவின் கடிதம்
பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமிய புத்தகசாலைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றிவிடுமாறு அச்சுறுத்தல் கடிதங்கள் வந்துள்ளன. தெமட்டகொட தௌஹீத் பள்ளிவாசல், தெமட்டகொட வீதி ஜமாதே இஸ்லாமி மற்றும் இஸ்லாமிய புத்தகசாலைக்கும் இந்த அச்சுறுத்தல் கடிதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இக்கடிதங்கள் பொதுபல சேனா அமைப்பின் கடிதத் தலைப்புடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அனுமதியின்றி நடத்திச் செல்லும் இஸ்லாமிய அடிப்படைவாத பள்ளிவாசலை உடன் அகற்று. சிங்கள இனத்தின் இதயமான அக்ரபோதி விகாரை உள்ள பூமிக்குள் உமக்கு இனிமேல் இடம் கிடையாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சிங்கள புத்தாண்டுக்கு முன் திருட்டுக் குகையை அகற்றிச் செல்லவிட்டால் அதனை எப்படி நிகழ்த்துவதென நாம் அறிவோம். எதிர்வரும் 31ஆம் திகதி நமது சேனாவின் பலத்தை கண்டுகொள்வீர்கள். கள்ள உலமாக்கள் அகற்றிக்கொண்டது போல் நீங்களும் அகற்றுவீர்கள் என்பதில் சந்தேகமில்லை. இனிமேலும் பிஸ்மில்லா மந்திரத்திற்கு இடமில்லை என்று இனவாதத்தை தூண்டும் வகையில் மேலும் அநாகரிகமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டும் இக்கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இக்கடிதம் குறித்து, முஸ்லிம் கவுன்சில் பொதுபல சேனா அமைப்பிடம் வினவியபோது, இக்கடிதத்துக்கும் எமது அமைப்புக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லையென தெரிவித்துள்ளது. இதுகுறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.