Published On: Tuesday, March 19, 2013
காணி அபகரிப்பு தொடர்பான தனிநபர் பிரேரணை: மாகாணசபை அமர்வு ஒத்திவைப்பு

இன்று செவ்வாய்க்கிழமை காலை கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு ஆரம்பமானபோது முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபையின் உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் தனிநபர் பிரேரணை ஒன்றைத் முன்வைத்தார்.
புல்மோட்டை பிரதேசத்தில் பொது மக்களின் காணிகளையும், பிரதேசத்தின் ஏனைய காணிகளையும் கடற்படையினர் ஆக்கிரமித்து வருகின்றனர். இவ்விடயம் தொடர்பாக இன்று விவாதிக்கப்பட்டு தீர்வு ஒன்றினை பெறவேண்டும் என தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக தொடர்ந்து விவாதிப்பதற்கு காணி அமைச்சர் விமலவீர திஸ்ஸ நாயக்க சபை அமர்விற்கு சமூகமளிக்காமையினால் இவ்விவாதத்தை பிரிதொரு நாளில் மேற்கொள்வோம் என்றும் காணிகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் தான் உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இருப்பினும் இவ்விடயம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் தெரிவித்தமையால் கிழக்கு மாகாண தவிசாளர் ஆரியபதி கலபதியினால் காலை 11.30 மணியளவில் சபையின் அமர்வினை ஏப்ரல் மாதம் 09ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இதுதொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பின்வருமாறு தெரிவித்தார். நீண்டகாலமாக குச்சவெளி பிரதேச மக்கள் முகம்கொடுத்து வந்த பிரச்சினை ஒன்றான இக்காணிப்பிரச்சினை கிழக்கு மாகாண சபையில் தனிநபர் பிரேரணையாக முன் வைக்கப்பட்டது. இவ் விடயத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுத்ததன் மூலம் தீர்வு பெற்றுத் தருவதாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
(இர்பான்)