எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, March 30, 2013

முஸ்லிம்களின் ஹர்த்தாலும் கற்றுக்கொண்ட பாடங்களும்

Print Friendly and PDF


இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளைக் கண்டித்து அறிக்கைகளை மட்டும் விட்டுக்கொண்டிருந்த முஸ்லிம் சமூக பிரதிநிதிகள் பொறுமையிழந்ததன் விளைவாக கடந்த திங்கட்கிழமை நாடுதழுவிய சாத்வீகப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாத அமைப்புகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் முஸ்லிம்கள் நாடுதழுவிய சாத்வீகப் போராட்டத்தை அனுஷ்டிக்குமாறு முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்த வேண்டுகோளுக்கமைய, முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை கடையடைப்புடன் உள்ளூர் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்திருந்தது. கிழக்கு மாகாண பாடசாலைகளில் முதலாம் தவணைப் பரீட்சை நடைபெறுவதினால் மாணவர்கள் வழமை போன்று பாடசாலைக்கு சென்றுவந்தனர்.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் பிரதேசத்தில் அமைதியான முறையில் ஹர்த்தால் அனுஷ்டிப்பட்டதுடன் வியாபார நிலையங்கள், சந்தைகள் என்பன மூடப்பட்டிருந்தன. பிரதேச செயலகம், அரச அலுவலங்கள், வங்கிகள் திறக்கப்பட்டு வழமைபோன்று சேவைகள் இடம்பெற்றன. ஆனால், அவற்றின் சேவைகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டன. இதனால் அப்பிரதேசங்களில் இயல்புநிலை பாதிக்கப்படிருந்தது. ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட முஸ்லிம் பிரதேசங்களில் பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் செறிந்து வாழ்வதால் அவர்களின் பாதுகாப்பு மற்றும் இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை கருத்திற்கொண்டு ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டாம் என சில முஸ்லிம் அமைப்புகள் இறுதி நேரத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தன. ஆனால், கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அதனை பொருட்படுத்தாது ஹர்த்தாலை அனுஷ்டித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வட, கிழக்குக்கு வெளியே பல்வேறு முஸ்லிம் பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவில்லை. கொழும்பு, கண்டி, மாத்தளை, குருநாகல், புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்கள் வழமைபோன்று வியாபார நிலையங்களைத் திறந்து தமது வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஹர்த்தால் அனுஷ்டிக்கும் முஸ்லிம் கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்போம் என கடும்போக்கு பெளத்த அமைப்பான பொதுபல சேனா அன்றையதினம் எச்சரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஹர்த்தாலை அனுஷ்டிக்கவேண்டாம் என்று ஆளும்தரப்பு முஸ்லிம் பிரதிநிதிகளாலும் பிரதேசங்களின் சமூக தலைவர்களாலும் முஸ்லிம்கள் கோரப்பட்ட நிலையிலும் வடக்கு, கிழக்கில் முஸ்லிம் பிரதேசங்களில் ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளமை முஸ்லிம் பொதுமக்களின் உணர்வுகளை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும் அரசின் அருவடிகளாக இருப்பதினாலேயே தங்களது உரிமைகளைப் பாதுகாக்க முஸ்லிம்கள் களத்தில் இறங்கவேண்டி நேரிட்டதாகவும், இது முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கும் அரசாங்கத்துக்கும், பொதுபல சேனாவுக்கும் நல்லதொரு பாடமாக அமையும் என்றும் அங்குள்ள முஸ்லிம்கள் கூறுகின்றனர்.

தற்போது இலங்கையில் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குள்ளான நிலையில் குட்டக்குட்ட குனிந்துகொண்டிருக்காமல் தங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாகவே பல்வேறு அழுத்தங்களையும் துச்சமென மதித்து பெரும்பாலான முஸ்லிம்கள் உணர்வுபூர்வமாக ஹர்த்தாலை அனுஷ்டித்ததில் அவர்கள் அரசுக்கு அழுத்தமான செய்தியை சொல்லியிருக்கின்றார்கள்.

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, அம்பாறை மாவட்டத்தில் மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், சம்மாந்துறை, ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில், திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம், மன்னார் முஸ்லிம் பகுதிகளிலும் இந்த சாத்வீகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, கொழும்பில் முஸ்லிம்கள் வர்த்தக நிலையங்களை மூடக்கூடாது ஹர்த்தாலுக்கு முன்தினம் பொலிஸார் நேரில் சென்று அறிவுறுத்தியுள்ளனர். புறக்கோட்டை பிரதான வர்த்தக பகுதிகளில் காலை வேளையிலேயே கடைகளைத் திறக்குமாறு பொலிஸார் அறிவித்தல் வழங்கியுள்ளனர்.

மேற்படி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர், ஐக்கிய தேசியக் கட்சியின் மேல்மாகாண உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முஸ்லிம்கள் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்தமைக்காக முஜிபுர் ரஹ்மான் ஒரு அடிப்படையான இனவாதி என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. ஹர்த்தாலின் அழைப்புக்கு கிழக்கில் அடிப்படைவாதத்துக்கு அடிமையான நகரங்கள் ஒத்துழைத்துள்ளதாக இனவாதத்தைப் போதிக்கும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

வட, கிழக்கு முஸ்லிம்கள் அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு நல்லதொரு பாடத்தை மேற்படி ஹர்த்தால் மூலம் கற்பித்துள்ளதாக முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் சார்பாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஹர்த்தாலின்போது அக்கரைப்பற்று பிரதான வீதியில் பிஸ்கால் சந்தியில் டயர்களை எரித்து பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகக்கூறி இராணுவத்தினர் இருவரைக் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்கள் இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எதிர்வரும் முதலாம் திகதி வரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, அட்டாளைச்சேனையில் கல்முனையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டி மீது கல்வீச்சு நடாத்தி பஸ்ஸின் கண்ணாடிகளை சேதப்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில் ஒரு ஆசிரியரும் மாணவர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிரான குரோதச் செயற்பாடுகள் ஒரு நிகழ்ச்சிநிரலின் கீழ் நடந்துவருவதையே நாளாந்த செயற்பாடுகளில் இருந்து அவதானிக்க முடிகிறது. முஸ்லிம்கள் ஒருநாள் கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டித்தமைக்காக அவர்கள் சிங்கள மக்களை துன்புறுத்த வேண்டாமென ஒரு அரசியல் கட்சி குற்றம்சாட்டுகிறது. ஆனால், மலை பிளந்த பிறகும் முஸ்லிம் தலைமைகள் வாய்மூடி மெளனிகளாக இருக்கின்றனர்.

தங்களது பிரதிநிதிகளாக பாராளுமன்றம் அனுப்பப்பட்ட முஸ்லிம் தலைமைகள் என்று சொல்லிக் கொள்கின்றவர்கள் இவ்வளவு அடிவாங்கியும் முஸ்லிம்களுக்காக குரல்கொடுக்காமை மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களை நம்பாது முஸ்லிம்களே களத்தில் இறங்கிப் போராடுவதற்கு துணிந்துவிட்டதை மேற்படி ஹர்த்தால் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

இந்த ஹர்த்தால் சிங்களவர்களுக்கோ அல்லது அரசாங்கத்துக்கோ எதிரான ஒரு ஹர்த்தால் அல்ல. ஆனால், பொதுபல சேனாவின் கொட்டத்தை அடக்காமல் அரசாங்கம் விட்டுக்கொண்டிருப்பதை ஞாபகப்படுத்துவதற்காவும், முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு ஒரு பாடமாகவுமே இது அமைந்துள்ளது.

(முஹம்மட் பிறவ்ஸ்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2