எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, March 30, 2013

தயட்ட கிருள முஸ்லிம்களுக்கு ஹலாலா? ஹராமா?

Print Friendly and PDF


இலங்கையில் நடைபெறும் ஏழாவது தயட்ட கிருள (தேசத்துக்கு மகுடம்) கண்காட்சி கடந்த சனிக்கிழமை ஜனாதிபதியினால் அம்பாறை, ஹாடி தொழில்நுட்பக் கல்லூரியில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அங்குரார்ப்பண நிகழ்வுடன் ஆரம்பமாகிய இக்கண்காட்சி கடந்த 6 வருடங்களாக களைகட்டிய போதும் இம்முறை சோபிழந்தே காணப்பட்டது.

பல நூற்றுக் கணக்கான சிங்கள யுவதிகளின் நடனத்துடனேயே இந்நிகழ்வின் அங்குரார்ப்பணம் நடைபெற்றது. அம்பாறை சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருப்பதால் கண்காட்சிக்கு வருகை தந்த பார்வையாளர்களில் பெருந்தொகையானவர்கள் அவர்களாகவே காணப்பட்டனர். ஏற்பாட்டாளர்கள் எதிர்பாராத விதமாக பார்வையாளர்கள் எண்ணிக்கையில் இம்முறை வீழ்ச்சி ஏற்படும் என்பது மட்டும் வெள்ளிடைமலையாகத் தெரிகின்றது.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக் காலமாக நடைபெற்று வருகின்ற பேரினவாத அமைப்புக்களின் செயற்பாடுகளில் ஒன்றுதான் தயட்ட கிருளவுக்கு செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கையில் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.

அம்பாறையில் நடைபெற்று வருகின்ற குறித்த கண்காட்சியைப் புறக்கணிக்குமாறு முஸ்லிம் பிரதேசங்களில் ஆங்காங்கே துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. இந்தத் துண்டுப் பிரசுரங்களில் முஸ்லிம்கள் கண்காட்சிக்குச் செல்வதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும், இதனை தவிர்ப்பதற்காக அங்கு செல்ல வேண்டாமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்காட்சிக்குச் சென்றால், முஸ்லிம் பெண்களின் பர்தாவை களைவார்கள், ஆண்களின் தாடிகளை வெட்டுவார்கள் என்றும் முஸ்லிம்கள் அங்கு செல்லாமல் தங்களது ஈமானை பாதுகாத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால், கண்காட்சிக்கு பெருமளவான முஸ்லிம்கள் சமுகமளிக்கவில்லை. இலங்கையில் முஸ்லிம்கள் செறி ந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் தயட்ட கிருளவைப் புறக்கணித்தது இலங்கையில் முஸ்லிம்களின் இருப்பு கேள்விக் குறியாக இருப்பதை புடம்போட்டுக் காட்டுகிறது.

இருந்தாலும், அறிவைத் தேடிச் செல்கின்ற சிலர் இதையெல்லாம் பொருட்படுத்தாது கண்காட்சியைப் பார்வையிட வந்திருந்தமை காணக்கூடியதாக இருந்தது. ஒரு சில முஸ்லிம் பெண்கள் அச்ச உணர்வுடன் அங்கு உலாவுவதையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அத்துடன், அவர்கள் கண்காட்சியைப் பார்வையிட வந்தது அயலவர்களுக்கு தெரிந்து விடக்கூடாது என்பதிலும் உஷாராக இருந்தார்கள்.
தயட்ட கிருளவுக்கு செல்வது முஸ்லிம்களுக்கு ஆகுமா? இது நடத்தப்படுவதன் நோக்கம், பின்னணி என்ன? எதற்காக நடாத்தப்படுகிறது என்பதில் கிழக்கு முஸ்லிம்களுக்கு இன்னும் போதியளவு தெளிவு வழங்கப்படாமையே இதற்கான பிரதான காரணமாகும்.

தயட்ட கிருள கண்காட்சி நடத்தப்படுவது பிரதானமான இரண்டு விடயங்களுக்காகவே, ஒன்று குறித்த மாவட்டங்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை அமுல்படுத்துவது, இரண்டாவது மக்கள் அங்கு சென்று தங்களது அறிவை, தேடலை வளர்த்துக் கொள்வதற்காகவாகும். நாம் அதனைப் புரிந்து கொள்ள மறுக்கின்றோம்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலநறுவை ஆகிய மாவட்டங்களை முன்னிலைப் படுத்தியே தயட்ட கிருள அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கிழக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற காரணத்தினால், இன விகிதாசாரத்துக்கேற்ப முதலீட்டுக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இதனை கிழக்கு மாகாண அமைச்சர் ஒருவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.

கண்காட்சியை முன்னிட்டு ஆங்காங்கே வீதி அபிவிருத்திகள், சுகாதாரத் திட்டங்கள் என்பன முன்னெடுக்கப்பட்டன. அவை சரியாக பகிர்ந்தளிக்கப்படவில்லை என்பது பலரதும் குற்றச் சாட்டு. ஆனால், ஒரு தயட்ட கிருளவினால் கிழக்கு மாகாணம் சிங்கப்பூராக குறுகிய காலத்துக்குள் மாறவேண்டுமென நாம் எதிர்பார்க்கவும் முடியாது.

இது ஒரு பௌத்த நாடு என பெரும்பான்மையினத்தவர்கள் கூறுகின்றனர். சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் அண்மைக் காலமாக தங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்காகப் போராடி வரும் நிலையில் இந்நிகழ்வு நடைபெறுவதினாலேயே குறித்த வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன.
குறித்த கண்காட்சியை முன்னிட்டு கிழக்கிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ “இலங்கையில் பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த நாட்டில் உரிமையிருக்கிறது’ என்று அடித்துக் கூறியிருந்த போதும் இது பேச்சளவில் மட்டுமே இருக்கிறது. இதற்காக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எடுக்கப்படுவதாகவும் தெரியவில்லை.

கண்காட்சியை முன்னிட்டு கிழக்கு மாகாணத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அண்மைக்காலமாக சர்ச்சைக்குள்ளான பொத்துவில் முஹூது விகாரைக்கு அடிக்கல் நாட்டிவிட்டுச் சென்றுள்ளார். அத்துடன் அங்குள்ள சிறியதொரு புத்தர் சிலையையும் திறந்து வைத்துள்ளார்.

நூறு வீதமுள்ள முஸ்லிம்கள் செறிந்து வாழும் பொத்துவில், மண்மலை பகுதியில் ஜனாதிபதி இவ்வாறு புத்தர் சிலைக்கு அடிக்கல் நாட்டியது முஸ்லிம்களிடையே மேலும் அதிருப்தியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த புத்தர் சிலையின் நிர்மாணப் பணிகளுக்கும் தயட்ட கிருளவுக்கும் தொடர்பிருப்பதாக பலர் ஊகிக்கின்றனர்.

இவ்வாறான ஒரு இக்கட்டான சூழ்நிலையில் தயட்ட கிருள கண்காட்சியைப் பார்வையிடச் செல்வது மற்றும் அபிவிருத்திகள் தொடர்பாக சிலரின் கருத்துக்களைக் கேட்டேன். அவர்கள் பகர்ந்து கொண்ட விடயங்கள் வருமாறு,

நவாஸ் சௌபி (பாடசாலை ஆசிரியர்)

அரசாங்க நிகழ்ச்சி நிரலுக்கு அமைவான தயட்ட கிருள நிகழ்வினை முஸ்லிம்கள் புறக்கணித்து, அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை வெளிக்காட்டும் நிகழ்வாக கையாண்டால் இங்கு முழுமையாக மக்கள் அரசுக்கு எதிரானவர்களாக காட்டப்படும் நிலைமையே தோன்றும்.

அரசாங்கத்துடன் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் எவ்விதமான எதிர்ப்புக்களையும் காட்டாத நிலையில், முஸ்லிம் மக்கள் இவ்வாறு புறக்கணிப்பது முஸ்லிம் மக்களை எதிரிகளாகவும், அரசியல்வாதிகளை நண்பர்களாகவும் காட்ட முற்படும் செயற்பாடாகும். இவ்வாறு புறக்கணிப்பது முஸ்லிம்களுக்கு முழுமையான வெற்றியைத் தருமா? என்பது கேள்விக்குறியே.

தயட்ட கிருள அபிவிருத்தித் திட்டத்தில் நிதியொதுக்கீடு செய்யப்படுவதில் முஸ்லிம் பள்ளிவாசல்கள், பாடசாலைகளுக்கு வெறும் கடிதங்களாகவே வழங்கப்பட்டுள்ளது. அவை, காசோலையாகவோ அல்லது அபிவிருத்தியை ஆரம்பிப்பதற்கான உறுதி மொழியாகவோ வழங்கப்படவில்லை.

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பேரினவாத சக்திகளுக்கு முஸ்லிம்களின் புறக்கணிப்பு இதுவொரு பாடமாக அமைந்தாலும் அரசியல் ரீதியாக இது ஆரோக்கியமானதொரு விடயமல்ல.

அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் ஒருங்கியிருக்கும் போது, முஸ்லிம் மக்கள் இதில் பகடைக்காய்களாக்கப்பட்டு ஏன் எதிர்ப்புக்களை சம்பாதிக்க வேண்டுமென்பதே எனது கேள்வி.

அன்வர் முஸ்தபா (தனியார் கல்வி நிறுவன பணிப்பாளர்)

இஸ்லாமிய கலாசார ரீதியாக நோக்குகையில் தயட்ட கிருளவுக்கு முஸ்லிம் பெண்கள் பங்குபற்றுவது என்பது பிழையான அபிப்பிராயமாகும். இதனால் முஸ்லிம் பெண்கள் அங்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இஸ்லாமிய கலாசார ரீதியில், அந்நிய ஆடவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளுக்கு முஸ்லிம் பெண்கள் செல்லக்கூடாது.

முஸ்லிம்கள் கண்காட்சியை பார்வையிடச் செல் வதனால், பௌத்த மதத்துக்கு முஸ்லிம்கள் உடந்தையாக இருப்பதாக இருந்துவிட முடியாது. முஸ்லிம்கள் ஈமானில் உறுதியானவர்கள். இலங்கையில் பௌத்த மதத்துக்கும், அதுசார்ந்த மார்க்க அனுஷ்டானங்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது திறந்த வெளி ரகசியம். அதன்படியே இந்த தயட்ட கிருளவும் நடாத்தப்படுகிறது. ஏனைய மதங்களுக்கு போதியளவிலான முன்னுரிமைகள் வழங்கப்படவிலலை என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

இந்த கண்காட்சியுடனான அபிவிருத்தித் திட்டத்தில் தமிழ், முஸ்லிம் பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியொதுக்கீடு ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் குறைந்த அளவேயாகும்.

இன்ஸிரா இக்பால் (பல்கலைக்கழக மாணவி)

முஸ்லிம் பெண்களின் உடை தொடர்பாக தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் முஸ்லிம் பெண்கள் கண்காட்சியைப் பார்வையிடுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.

பல்கலைக்கழக மாணவர்கள் என்ற வகையில், அவர்கள் கண்காட்சிக்குச் சென்று அறிவார்ந்த விடயங்களை தெரிந்து கொள்ளவும் புதிய விடயங்களையும் தேடிக் கற்றுக் கொள்ள விரும்புவார்கள். இந்நிலையில் அவர்கள் நண்பர்கள் குழுவாகவோ, தனியாகவோ செல்வதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும். கண்காட்சிக்கு செல்வதை நான் முழுமையாக ஆதரிக்காவிட்டாலும், பல்கலைக்கழக ரீதியில் உத்தியோகபூர்வமாகச் செல்வதில் பிரச்சினையில்லை. பெண்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே விரும்பியவர்கள் செல்ல வேண்டும்.

அத்துடன், தயட்ட கிருளவில் இரவு நேரங்களில் தேவையில்லாத களியாட்ட நிகழ்வுகள் நடைபெறுவதனால் இரவு நேரங்களில் செல்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும்தான் என அவர் கூறினார்.

தயட்ட கிருளவுக்கு செல்வதில் பலவாறான கருத்துக்கள் இருந்தாலும், முஸ்லிம்கள் அதனைப் புறக்கணிக்க @வண்டிய @தவையில்லை. தூரஇடங்களில் நடைபெறுகின்றபோது இதனைப் பார்வையிட முடியாதவர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேவண்டும். அதைவிடுத்து, இதனை பகிஷ்கரிப்பதன் மூலமாக முஸ்லிம்கள் அர”க்கு எதிரானவர்களாக சித்திக்கப்படுவதிலிருந்து தவிர்ந்துகொள்ள முடியும்.

பிந்திய கலநிலவரங்களின்படி, தற்போதுது முஸ்லிம்கள் அங்கு செல்கின்ற தொகை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. அத்துடன், பாடசாலைகளில் நடைபெற்ற முதலாம் தவணைப் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளமையினால், மாணவர்கள் பாடசாலைரீதியாகச் அங்கு சென்று கண்காட்சியை பார்வையிடுவதற்கான சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ள முடியும்.

(அம்பாறையிலிருந்து முஹம்மட் பிறவ்ஸ்)

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2