Published On: Thursday, March 28, 2013
முதலாம் தவணைப் பரீட்சை தொடர்பில் மாறுபட்ட அறிவித்தல்கள்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் முதலாம் தவணை பரீட்சை ஒத்திவைப்பு தொடர்பாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் விடுத்துள்ள அறிவித்தலுக்கு முரண்பட்டதாக மட்டக்களப்பு மத்திய கல்வி வலயப் பணிப்பாளர் அறிவித்துள்ளமை குறித்து ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அம்பாறையில் நடைபெற்று வரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு பாடசாலை மாணவர்கள் கலந்து கொள்வதற்கு ஏதுவாக நேற்று புதன்கிழமை, இன்று வியாழக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள பரீட்சைகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், இப்பரீட்சைகள் அடுத்தவாரம் நடைபெறும் திகதிகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.றி.எம்.நிஷாம் உத்தியோக பூர்வமாக அறிவித்திருந்தார்.
ஆனால் இன்று வியாழக்கிழமை நடைபெறவிருந்த பரீட்சை சனிக்கிழமை நடத்தப்படவேண்டுமென மட்டக்களப்பு மத்தி வலய கல்விப் பணிப்பாளர் வலயத்திலுள்ள சகல பாடசாலைக்கும் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நிருவாகப் பிரிவு பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஏ.நஷீரா நேரசூசியில் கையொப்பிட்டுள்ளார். நாளை வெள்ளிக்கிழமை தேசத்திற்கு மகுடம் கண்காட்சிக்கு செல்லும் பட்சத்தில் கூட்டுக்தொழுகைக்கு சமூகமளிக்க முடியாதுள்ளதால் பல முஸ்லிம் பாடசாலை நாளை வெள்ளிக்கிழமை கண்காட்சிக்கு செல்வதை தடுத்து சனிக்கிழமை கண்காட்சிக்கு செல்வதற்கு தீர்மானித்துள்ளது.
ஆனால் வலயக் கல்வி அலுவலகத்தில் விசேட அறிவித்தல் காரணமாக முஸ்லிம் பாடசாலைகளுக்கு கண்காட்சி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை விடுமுறை தினமான சனிக்கிழமையன்று பரீட்சை நடைபெறுமென அறிவித்துள்ளதால். தூர பிரதேசத்தில் உள்ள ஆசிரியர்கள் பாடசாலைக்கு செல்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ள வேண்டிள்ளது என தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே அத்தினத்தில் பாடசாலைக்கு சமூகமளிக்க முடியாத அசிரியர்களுக்கு விடுமுறை பதிவு செய்வதில் சிக்கல் ஏற்படும் என பாடசாலை அதிபர்கள் கூறுகின்றனர். இது இவ்வாறு இருப்பினும் வலயக் கல்வி அலுவலகத்தின் முரண்பாடான அறிவித்தலினால் பல தரப்பினரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(குகதர்சன்)