Published On: Friday, March 15, 2013
முரளிதரன் எடுத்த முடிவே கிழக்கு மாகாணத்தின் சுந்திரத்துக்கு காரணம்
பிரதியமைச்சர் முரளிதரன் சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவின் காரணமாகவே இன்று கிழக்கு மாகாணம் உட்பட சகல பிரதேசங்கிலும் மாணவர்கள் சுதந்திரமாக கற்றல் நவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய சூழல் உருவாகியுள்ளது என கல்குடா வலய கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சந்திவெளி சித்தி விநாயகர் கனிஷ்ட வித்தியாலய புதிய கட்டட அடிக்கல் நடும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;
எமது பிரதேசத்திலே சேவையாற்றக்கூடிய சரியான தலைமைத்துவம் தற்போது பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் மூலம் எமக்கு கிடைத்துள்ளது. முன்பு அவர் தலைமைதாங்கிய அனுபவமுள்ளவர். அந்த நேரத்தில் கல்வி வளர்ச்சிக்காக பல திட்டங்களை வகுத்து செயற்படுத்தியவர். அவர் சரியான நேரத்திலேயெடுத்த முடிவுதான் இன்று எமது மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
முப்பது வருட கால யுத்தத்தினால் நாம் மிகவும் பாதிக்கப்பட்டு எமது உடமைகளை இழந்து பொருட்களை இழந்து வீடுகளை இழந்து முகாம்களிலே வாழ்ந்து வந்தோம். இதனால் எமது பிரதேச மாணவர்கள் சரியான முறையிலே கல்வி கற்க கூடிய சூழ்நிலை இருக்கவில்லை. ஆனால் இன்று இந்த நிலை மாறியுள்ளது இந்த சூழ்நிலையை உருவாக்கியவர் எமது பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் என்பதை யாரும் மறக்கக்கூடாது. வரலாற்றிலே அவரது பெயர் இடம்பெற வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் எமது பிரதேசத்தின் கல்வியை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அது எமது கடமையாகும். அதற்கு அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றார்களின் உதவியுடன் கல்குடா கல்வி வலயத்தின் மாணவர்களின் கல்வியை கட்டியெழுப்ப வேண்டும் என்பதிலே நான் உறுதியுடன் இருக்கின்றேன். இதற்கு பல திட்டங்களை தயாரித்துள்ளேன். இதற்கு எனது வலயத்திலேயுள்ள சகல அரசியல்வாதிகளும் எமக்கு கைகொடுக்க வேண்டும்.

எமது அலுவலகத்திலே நீண்டகாலமாக முடிக்கப்படாத கட்டடத்தினைப் பூர்த்தி செய்வதற்காக நிதியை கேட்டவுடனே பிரதியமைச்சர் ஒதுக்கீடு செய்து தந்துள்ளார். அரசியல்வாதிகள் வளங்களைப் பெற்றுத்தருவார்கள். ஆனால் அந்த வளங்களை சரியாகப் பயன்படுத்தி பிரதேச மாணவர்களை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்குவது உங்களுடைய பொறுப்பும் கடமையுமாகும். அந்தவகையில் அவர்களின் பொறுப்பிலே பெற்றார்களும் இணைந்து செயற்பட வேண்டும்.
சந்திவெளியிலுள்ள இந்த பாடசாலை 1000 பாடசாலை அபிவிருத்தித் திட்டத்திலே உள்வாங்கப்பட்டுள்ளது. அதனால் இந்தப் பாடசாலை அபிவிருத்தியடையும். அதன் மூலம் இந்த பிரதேசம் அபிவிருத்தியடையும். இதனால் கல்குடா கல்வி வலயம் துரித வளர்ச்சியடையும் என்பது எமது எதிர்பார்ப்பு என்றார்.
வித்தியாலய அதிபர் எஸ்.சிவசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கல்குடா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார், ஏறாவூர்ப்பற்று 2 கோட்டக்கல்வி அதிகாரி ஆ.சுகுமாரன், வாகரை கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.பரமேஸ்வரன், மீள்குடியேற்ற பிரதியமைச்சரின் பிரத்தியேக செயலாளர் பொன்.ரவீந்திரன், பணிப்பாளர் கே.சத்தியவரதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
(ந.குகதர்சன்)