Published On: Saturday, March 16, 2013
குண்டர்களுடன் வீடுபுகுந்து தாக்குதல் நடத்தும் சிங்கள ராவய

நாவல, வலாவத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறிப் புகுந்த சிங்கள ரவாய அமைப்பைச் சேர்ந்த பிக்குகளும் அவர்களோடு இணைந்த குண்டர்களும் குறித்த வீடு மீதும் அங்கிருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக கொழும்பு கெஸட் செய்தி வெளியிட்டுள்ளது. நேற்று மாலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் சட்டவிரோதமான முறையில் மத பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுவதாகக் கூறியே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக்குழுவினர் வீட்டு உரிமையாளரின் மனைவியை அவர்களது பிள்ளையின் முன்னிலையில் தாக்கும் காட்சி தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கமெராவில் பதிவாகியுள்ளது.
இந்த வீட்டில் பௌத்த சிலைகளுடன் ஏனைய மதங்களை பிரதிநிதிதித்துவப்படுத்தும் படங்களும் அருகருகே காட்சிப்படுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அங்கிருந்து புத்தர் சிலையை அகற்றுமாறு ஒரு பிக்கு குண்டர்களுக்கு உத்தரவிட்டதாகவும் மற்றொரு பிக்கு அவ்வீட்டிலிருந்த பைபிளை வீசி எறிந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிஸார் இரு தரப்பினரையும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற்றுள்ளனர். தமது வீட்டுக்கு வந்த குண்டர்கள் அங்கிருந்த கையடக்கத் தொலைபேசி மற்றும் ஒரு தொகைப் பணம் என்பவற்றை களவாடிச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செயதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.