Published On: Friday, March 15, 2013
முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு செயற்பட வேண்டிய காலகட்டம் இது: ஹரீஸ் எம்.பி.

உலக நாடுகளெங்கும் மனித உரிமை பற்றி பேசப்பட்டுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில் ஐக்கிய நாட்டு சாசனம், மனித உரிமை சாசனம் என்று மனித உரிமைகளின் முக்கித்துவம் பற்றி பேசப்படுகின்ற நிலையில் இலங்கைவாழ் தமிழ் மக்கள் வாழ் அல்லது வாழவிடு என்ற நிலைக்கு ஒரு காலகட்டத்தில் தள்ளப்பட்டிருந்த நிலமை இன்று மாறி உண் அல்லது உண்ணவிடு என்ற நிலைக்கு முஸ்லிம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையை கண்டும் காணாமல் கை கட்டியிருக்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனை அபிவிருத்திக் குழுவின் தலைவருமான எச்.எம்.எம். ஹரிஸ் கூறினார்.
சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் நேற்று கல்லூரி
மைதானத்தில் அதிபர் எம்.எஸ்.நபார் தலைமையில் நடைபெற்றபோது இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்; கொழும்பில் நடைபெற்ற ஜம்மிய்யத்துல் உலமா சபையும் பெளத்த தேரர்களும் இணைந்து நடாத்திய ஹலால் தொடர்பான ஊடகவியளாலர் மகாநாட்டுடன் ஹலால் பிரச்சினையும் முஸ்லிம்களுக்கு எதிராக அண்மைக்காலமாக நடைபெற்று வருகின்ற குரோதத்தன்மை முடிவடைந்து விட்டது என்று நினைக்கக்கூடாது. அன்றிலிருந்துதான் முஸ்லிம்களுக்கு பிரச்சினை ஆரம்பித்துள்ளது.
குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலும் முஸ்லிமான ஒவ்வொரு மனிதனும் ஏனைய மதங்களையும், அவர்களின் உணர்வுகளையும் அவர்களது கலை கலாசார விழுமியங்களையும் மதித்து கண்ணியப்படுத்தி நடக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது. தமிழ், சிங்கள மற்றும் கிறிஸ்தவ சமூகம் துயருறும்போது அதனை கண்டும் காணாது போல் நடப்பதை இஸ்லாம் அடியோடு வெறுக்கின்றது. இவ்வாறு குர்ஆன் கூறுகின்றபோது குர்ஆன் என்றால் என்ன என்று தெரியாத அமைச்சர் சம்பிக்க ரணவக்க குர்ஆனை வாசித்துக் காட்டி விளக்கம் கற்பிக்கின்றார். முஸ்லிம்கள் நாம் ஒற்றுமைப்பட்டு செயலாற்ற வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் இருந்துகொண்டிருக்கின்றோம்.
இன்று எமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஹலாலை ஒழிப்போம் என்ற தோரணையில் நாட்டின் ஸ்திரத்தன்மையினையும், சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சீர்குலைக்க பொதுபல சேன கங்கனம் கட்டிக்கொண்டு அப்பாவி பௌத்தமக்களை தூண்டி முஸ்லிம்களுக்கு எதிராக துவசே மனப்பாங்குடன் கசப்புணர்வினை ஏற்படுத்திவருகின்றனர். ஹலாலினை இலங்கையில் இல்லாதொழிக்க பொதுபல சேனா எடுத்துவரும் முயற்சியில் வெற்றி பெற்றாலும் ஹராத்தை எந்தவொரு முஸ்லிமும் அனுமதிக்கப் போவதில்லை.
அதுமாத்திரமல்ல பொதுபல சேனாவின் அடுத்த இலக்கு ஹிஜாப், முஸ்லிம் பெண்கள் இனி ஹிஜாப் அணியக்கூடாது, சிங்களப் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களும் மற்றும் ஆசிரியர்களும் ஹிஜாபின்றியே பாடசாலைக்குள் செல்லவேண்டும். அரச அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் பெண்களும் இவ்வாறே செயற்படவேண்டும் என்று பகற்கணவு கண்டு கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான சம்பவங்கள் நடைபெற நாம் ஒருபோதும் இடமளிக்கக்கூடாது.
எனவேதான், முஸ்லிம்களாகிய நாம் அரசியல் பேதங்களை மறந்து அனைவரும் ஒற்றுமைப்பட்டு ஜம்மிய்யத்துல் உலாமாவுடன் இணைந்து அரசியல் தலைமைகளோடு பேசி முஸ்லிம்களின் அத்திவாரத்தை அசைத்துப் பார்க்கின்ற விடயத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.
(எஸ்.அஷ்ரப்கான்)