Published On: Wednesday, March 27, 2013
சிங்களர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள்: இலங்கைக்கான இந்திய தூதர் கரியவாசம்

சிங்களர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசம் தெரிவித்துள்ளார். அதில், இலங்கை மக்கள் தொகையில் 75 சதவீதம் உள்ள சிங்களர்கள் இந்தியாவின் ஒதிஷா உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். எனவே, இலங்கையில் வெறும் 12 சதவீதம் மட்டுமே உள்ள தமிழர்களை இந்திய வம்சாவளியினர் எனக் கருதி கவலைப்படக்கூடாது. மாறாக 75 சதவீதம் உள்ள சிங்களர்கள் தான் இந்திய வம்சாவளியினர் என்பதை உணர்ந்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில் தான் இந்தியா கவலைக் கொள்ள வேண்டும்' என இலங்கைத் தூதர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், இந்திய மாநிலங்களிடையே பிரிவினையை ஏற்படுத்த கரியவாசம் முயற்சி செய்கிறார். அவரை கடுமையாக எச்சரித்து நாடு கடத்த வேண்டும் என கூறியுள்ளார். கரியவாசத்தின் கருத்துக்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது; இந்தியாவுக்கான இலங்கைத் தூதராக பணியாற்றி வரும் பிரசாத் கரியவாசம் அண்மையில் தில்லியில் உள்ள இந்திய ஊடகங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியிருக்கிறார்.
சிங்களர்கள் இந்திய வம்சாவளிகள் என்ற இலங்கைத் தூதரின் கருத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை. சிங்களர்களும் இந்தியர்களே என்ற எண்ணத்தை இந்திய மாநிலங்களிடையே ஏற்படுத்தி, அவற்றுக்கிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் இலங்கை நீண்ட காலமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாகவே இலங்கை அதிபர் ராஜபக்சே கடந்த 6 மாத இடை வெளியில் 2 முறை இந்தியா வந்து மத்திய பிரதேச முதலமைச்சரையும், பீகார் மாநில முதலமைச்சரையும் சந்தித்து பேசியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாகவே இப்போது இந்திய ஊடகங்களுக்கு இலங்கைத் தூதர் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்குடன் இலங்கை தூதர் மேற்கொண்டுள்ள இந்த செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. ஒரு நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டு தூதர்கள், அந்நாட்டில் கலகம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்று 1961ஆம் ஆண்டின் வியன்னா ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் கரியவாசம் செயல்பட்டிருக்கிறார். அவர் தொடர்ந்து விதிமுறைகளை மீறி செயல்பட்டு வருகிறார் என்றும் மேலும் தெரிவித்தனர்.
(சென்னையிலிருந்து சாஹுல்)