Published On: Monday, April 08, 2013
அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதிகள் 28 பேர் உண்ணாவிரதம்
சர்வதேச சட்டங்களின் படியும் அவுஸ்திரேலிய சட்டங்களின் படியும் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள 25 தமிழர்கள் உட்பட 28 பேர் மெல்போர்னில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணி தொடக்கம் தடுப்புமுகாமின் முற்பகுதியில் அமர்ந்தவாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தங்களை விடுதலை செய்யுமாறு அல்லது கருணைக்கொலை செய்யும் படியும் இவர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். இவர்கள் அந்நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக்கூறி முடிவில்லா தடுப்புமுகாம் வாழ்க்கை என்ற நிலையில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், குறிப்பாக இலங்கை தமிழர்கள் என இலக்குவைக்கப்பட்டு இவ்வாறான இறுக்கமான நடைமுறையின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொதுவான கருத்து நிலவுகின்றது.

தற்போதைய நடைமுறையின்படி அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் பாதுகாப்பு பரிசோதனை என்ற மதிப்பீட்டை அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான ASIO மேற்கொண்ட பின்னர் அகதிகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகின்றது.
பாதுகாப்பு மதிப்பீட்டில் ஒருவர் நிராகரிப்பட்டால் அவர் காலவரையறையற்ற முறையில் தடுப்பு முகாமில் அடைக்கப்படுவார். அவர்களுக்கான மீள் விசாரணையோ மேல்முறையீடோ அனுமதிக்கப்படுவதில்லை. இந்நடைமுறையின் காரணமாக தமிழ் மக்களே பெரும்பாலும் பாதிப்பை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

இவ்வாறு பாதுகாப்பு மதிப்பீட்டில் நிராகரிக்கப்பட்ட நிலையில் பெண்கள் குழந்தைகள், சிறுவர்கள் உட்பட சுமார் 55 இலங்கை தமிழர்கள் காலவரையறையற்ற முறையில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்கள். மூன்றாண்டுகளுக்கும் மேலாக எதிர்காலம் பற்றிய எதுவித நம்பிக்கையுமின்றி, சாகும்வரை தடுப்புக்காவலிலேயே வாழ்ந்தழியும் நிலைமீது அதிருப்தி அடைந்த நிலையில் மெல்போர்ன் முகாமில் தங்கியுள்ள 28 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.