Published On: Monday, April 08, 2013
எதிலும் வீண்வம்புகள்: இதுவே அமைதி குலைவுக்கு காரணம்

(கழுகுப்பார்வை)
பொதுபலசேனா சிங்கள பௌத்த தேரர்களது சட்டவிரோதமற்ற அதிரடிக்குழு அதாவது சட்டத்திற்கு உட்படாத பொலிஸார் என்றே அவர்களே அழைக்கின்றார்கள். நாட்டில் பௌத்த மதத்தையும், மக்களையும் பாதுகாக்கும் ஒருபடை. அவ்வாறு பௌத்தர்களுக்கும், பௌத்த மதவாதிகளுக்கும் என்னதான் இந்த நாட்டில் அநியாம் நடக்கிறது. பெரும்பான்மை சமூகமான சிங்களவர்களே நாட்டை ஆள்கின்றனர். அவர்களின் இனத்திலிருந்தே பாதுகாப்புப் படை வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு நாட்டைப் பாதுகாக்கின்றனர்.
ஜனாதிபதி தொடக்கம் அமைச்சர்கள் வரையில் முக்கியமான அமைச்சுக்கள் பெரும்பான்மைச் சமூகத்தின்வசமே உள்ளன. அதிகாரம் அனைத்தும் சிங்கள சமூகத்தின்பக்கமே உள்ளது. காரியாலயங்கள், தினைக்களங்கள் என எதனைப் பார்த்தாலும் சிங்கள சமூகத்தைச் சேர்ந்தவர்களே காணப்படுகின்றனர். வடக்கு கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்து எப்பிரதேசத்திற்குச் செல்வதானாலும் சிங்கள மொழியின் அவசியம் உணரப்பட்டுள்ளமை யாவரும் அறிந்தவிடயம்.
சிங்கள மொழியும், தமிழ் மொழியும் ஒரே அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளது என்று மொழி உரிமைகள் பற்றிய சிறப்பு ஏற்பாடுகள் காணப்பட்டாலும் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளதா என்றால் அது மிக மிகக் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. மதஉரிமைகள் காலம்காலமாக பின்பற்றப்பட்டு வந்த சமாச்சாரம் போய் சிங்கள மத உரிமையை பாதுகாப்பதற்கு நாங்கள் தயாரிகிவிட்டோம் நீங்கள் எல்லாம் வந்தேறு குடிகள் வெளியேறுங்கள் என்கிற மமதையில் இந்த பொதுபலசேனாவினரின் அட்டகாசம் வீண்வம்பை விலைக்கு வாங்கு கின்ற இச்செயலானது நான்டின் அமைதி குலைவுக்கு காரணமாக அமையலாம் என்பதுதான் இறுதி முடிவாகும்.
முஸ்லீம்கள் மீதான வீண்வம்புகள் தொடர்கின்றன. எப்படி? பொதுபலசேனா அமைப்பின் செயலாளரான கலகொட அத்தே ஞானதேரர் அறிக்கை ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார். இந்த பொதுபலசேனாவில் முஸ்லீம் பிரிவொன்றை ஆரம்பிக்கப் போகின்றார்களாம். ஏனென்றால் சம்பிரதாய முஸ்லீம்களுக்கு அடிப்படைவாத எண்ணங் கொண்ட முஸ்லீம்களால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதனை தடுத்து நிறுத்தி அவர்களிடமிருந்து எங்களது முஸ்லீம் சமூகத்தினைப் பாதுகாத்து தருமாறு பல முஸ்லீம்கள் கோரிக்கை விட்டுள்ளனர்.
ஆதலினால் முஸ்லீம் சமூகத்தைப் பாதுகாப்பதற்குரிய ஏற்பாட்டை மேற்கொள்வதற்கு முஸ்லீம் பிரிவொன்றை பொதுபல சேனைக்குள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்று ஒரு போடு போட்டுள்ளார். பாருங்கள் முஸ்லீம் சமூகத்தைப் பார்த்துக் கொள்ள இவர்களிடமா கையேந்துகின்றோம். வீண்வம்புக்காரர்களின் துவேசமான நடிப்புக்களுக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். அனுராதபுரத்திலுள்ள மல்வத்து ஓய டிக்ஸன் தெருவிலுள்ள இஸ்லாமிய மார்க்கத்தைப் புகட்டுகின்ற மத பாடசாலை (ஒதுகின்ற பள்ளி)யை பலவந்தமான முறையில் நிரந்தரமாக அகற்றுவதற்குரிய ஏற்பாடுகளை இந்த பொ.ப.சே வினர் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்கிற செய்தி ஒன்று புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்துள்ளதாக பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் சேனாரத்னா கூறியுள்ளார்.
இப்படிப்பட்டவர்களிடமா முஸ்லீம் சமூகத்தின் பாதுகாப்புள்ளது. இவர்களிடமா சம்பிரதாய முஸ்லீம்கள் பாதுகாப்பு வேண்டினர். சம்பிரதாயப் பிரிவினர் என்கிற ஒரு பிரிவினரோ, அடிப்படைவாதப் பிரிவினரோ என்று எந்தப்பிரிவும் முஸ்லீம் சமுகத்தினரிடம் இல்லை. ஒரே இறைவனை வணங்குகின்ற ஒரே அமைப்புத்தான் இலங்கை முஸ்லீம் சமூகம் என்பதை இவர்கள் ஏனோ விளங்கிக் கொள்ளவில்லை. எல்லாமே வீண்வம்புக்கான செயற்பாடுகளே.
அண்மைக்கால சம்பவங்கள் பலவற்றைப் பார்க்கின்றபோது வீண்வம்புகளை விலைக்கு வாங்கும் செயலாகவே தெரிகின்றது. அரன்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல எதிலும் பொல்லைக் கொடுத்து அடிவாங்கும் நிலைக்கு இன்று பொதுபல சேனா (முஸ்லீம்களை எதிர்க்கும் திணைக்களம்) உறுதிபூண்டுள்ளது போல தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் முஸ்லீம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களைப் பார்க்கின்றபோது மேலே கூறிய விடயங்கள் ஒத்துப்போகின்றன. ஒருகட்டத்தில் முஸ்லீம்களின் வணக்கஸ்தலங்கள் எங்களது மதத்தின் தூய்மையை தூசாக்குகிறது, பள்ளிகளில் சொல்லப்படும் பாங்கு காதை துளைக்கிறது, பௌத்தம் பாளாகிறது, பள்ளிகளின் அதிகரிப்பு பௌத்த மதத்தை அழிக்கிறது, முஸ்லீம்களது இஸ்லாம் மார்க்கம் வளர்கிறது. இது எங்களது பௌத்தத்தை இல்லாமலாக்கிவிடும் என்றெல்லாம் ஏதேதோ காரணங்களைக் காட்டி தம்புள்ள தொடக்கம் அனுராதபுரத்தின் கபுறடியில் ஆரம்பித்து கொழும்பு, தெஹிவல என்று குருநாகல் வந்து கோகால சென்று நாடு முழுவதும் சுற்றுச்சுழற்று சூறாவளிபோல ஆடிஓய்ந்தது.
இதனைக் கண்டும் காணாதபோல முஸ்லீம் அணித்தலைவர்களில் சிலர் பெரும்பான்மையினரான பௌத்தர்களின் நாடு, அவர்கள் பள்ளிகளை உடைக்கவில்லை என்றெல்லாம் நம் தலைவர்கள் கூறி சமாளித்து விட்டார்கள். அதன் பின்னர் ஓரளவு ஓய்ந்து சனியன் தொலைந்துவிட்டது என்று அமைதியடைந்தனதர். மீண்டும் ஒரு சனியன் ஆரம்பித்தது அடுத்த இரண்டாம் கட்டச் சனியன்.
ஒருகால கட்டத்தில் எங்கோ பெண்களை வெட்டுகின்றார்கள், முஸ்லீம் பெண்களை துரத்துகின்றார்கள், தேயிலைத் தோட்டங்களில் மர்ம ஆசாமிகள் நடமாடுகிறார்கள், உடம்பில் ஏதோவெல்லாம் பூசிக் கொண்டு பெண்களின் மார்புகளை பதம்பார்க்கின்றார்கள், முஸ்லீம் பிரதேசத்தில் இவ்வாறான சம்பங்கள் அதிகமதிகம் நடைபெற்று மக்கள் அவர்கள் துரத்த அவர்கள் அண்மையிலுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்களுக்குள் சங்கமமாகி விடுகின்றார்கள் என்றெல்லாம் பேசப்பட்டது. ஓட்டமாவடியில், பொத்துவிலில், இறக்காமத்தில் என்று கிழக்கு எங்கும் கிறீஸ் மனிதர்களது நடமாட்டம் பேயா பேசப்பட்டன.
ஆனால் அனைத்தும் சில நாட்களில் அடியோடு மறைந்துவிட்டது. அப்போது மக்கள் பேசிக்கொண்டார்கள் இவை அனைத்தும் சிலரின் பம்பாத்துக் கூத்துக்கள் என்று. எதிர் கட்சியினரோ இது அரசின் பூச்சாண்டி விளையாட்டுக்கள் என்றார்கள். எது எப்படியோ பல கொலைகளோடு இருந்த இடம்தெரியாமல் மறைந்து விட்டான் அன்றைய கிறீஸ்மேன். இப்போது அதே பாணியில் முஸ்லீம்களையும், அவர்களது பொருளாதாரத்தையும், உயிரிலும்மேலான மார்க்க அடிப்படையான விடயங்களிலும் கைவைத்தார்கள். முடியாதபோது சரியாக பிடித்துக் கொண்டு கொக்கரிக்கத் தொடங்கினர்.
அப்போதெல்லாம் ஆளும் கட்சிக்குள் சங்கமாகிய நம்மாளுகள் யாரும் வாய்பேசாது மௌனித்துப் போயினர். பட்டம், பதவி, தான் மேற்கொண்ட கொள்ளைகள், மண்போடாது வவுச்சர் முடித்த கதைகள் எல்லாம் அம்பலத்திற்கு வந்தால் ஆளும் கட்சியின் தலைவர் சும்மா விடுவாரா? சந்து பொந்துகள் எல்லாம் நம்மமனிதரை விடாது துரத்தியடிப்பார் தலைவர். இறுதியில் கடாபி நிலைதான் வரும் என்று பயந்தாங்கொள்ளிகளாக ஒழிந்து கொண்டனர் நம்மாளு முஸ்லீம் தலைவர்கள்.
இதனை நன்கு திட்டமிட்டுப் பயன்படுத்திக் கொன்டனர் பொ.ப.சேனாவினர். பள்ளியை உடைத்தவர்களுக்கே எதுவும் நடக்கவில்லை ஏக இறைவனாவது, ஆண்டவனாவது, நமது புத்தர் இருக்கின்றார் எம்மைக் காப்பாற்றுவார் என்று நினைத்து வலிந்துவந்து முஸ்லீம்களைத் தீண்டித்தான் பார்ப்போமே என்று நினைத்து ஹலால் எனும் சட்டப்பெட்டிக்குள் வைத்தார்கள். பன்றி முஸ்லீம்களுக்கு ஹறாமாக்கப்பட்ட உணவு. இதனைப் பயன்படுத்தி அந்தப் பன்றிக்குள் இந்தப் பன்டிகள் நுழைந்து ஏதோவெல்லாம் பேச நமது சிந்தனைவாதிகள் சிலர் ஒத்து ஊதினார்கள்.
நிலைமை சக்ஸஸ் என்று மீண்டும் ஒருபோடு போட்டுப்பார்த்தால் என்ன என்கிற வக்கிரப்புத்தி மேலாடின. வீண்வம்புகள் தலைக்கேறின. முஸ்லீம் தலைமைகள் பேசாது இருப்பது திருவாளர் பொதுபலசேனாவுக்கு முறுக்கேற்றிவிட்டது. எடுத்தார்கள் பொல்லை அடித்தார்கள் முஸ்லீம்களின் பொருளாதாரத்தில் அது பெசன்பெக், நோலிமிட் போன்ற வர்த்தக நிலையங்களைத் தாக்கத் தொடங்கினர். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் செட்டி என்பதுபோல, மீண்டும் ஒரு களோபரத்தை தீண்டி முஸ்லீம்களை வம்புக்கு இழுக்க இழுக்க இந்த முஸ்லீம்களும் பலூன் மாதிரி இழுபடத் தொடங்கிவிட்டார்கள். எப்படியும் இழுத்து உடைத்துவிட்டால் அனைவரும் சரண்டர் என்கிற நிலைமை ஏற்படும் என்று இந்த பொதுபலசேனாவினர் எண்ணத் தொடங்கினர்.
விழுந்தும் மண் ஒட்டவில்லை என்று மறைமுகமாகக் துடைத்துக் கொண்டனர் இந்த பொ.ப.சேனாவினர். பெஷன்பெக் நிறுவன உடைப்பில் கலந்து கொண்ட காடையர்கள் பலர் கைதாகினர். பலர் சரணடைந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வளவு பெரியதோர் நிறுவனம் தாக்கப்பட்டது. பொலிஸார் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். இறுதியில் நீதிமன்றில் பிரச்சினை செல்கின்றது. ஆனால் இறுதியில் பாதிக்கப்பட்ட நிறுவனத்தினர் மன்னிப்பு வழங்கியதாகவும் அவர்களை விடுதலை செய்யுமாறும் வர்த்த நிறுவனம் கூற விடுதலை செய்யப்பட்டார்களாம் என்கிற கதையை இப்போது அளக்கின்றார்கள்.
இதில் ஒரு மர்மம் தொங்கி நிற்கின்றது. பொதுபலசேனாவுக்கும் உலமா சபையினருக்கும் இடையில் ஹலால் பிரச்சினை முடிவுக்கு வந்தபோது ஒரு கதை உலாவியது. உலமாக்கள் அடக்கியாளப்பட்டார்கள்;. அவர்களுக்கு மிரட்டல்கள் நடந்துள்ளன. ஆதலால்தான் இவர்கள் இந்த முடிவுக்கு வந்தார்கள் என்றெல்லாம் பேசப்பட்டன. அதுபோன்றதொரு நிலைமைதான் இன்றைய பெஷன்பெக் கலவர நிலவரத்திலும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுதொடர்பாக அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துக்களை வெளியிட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளர் பொதுபல சேனாவுக்கும், நம்மாளுகளுக்கும் சிம்மசொப்பனமாக இருக்கின்ற ஆஸாத் சாலி “காடையர் கும்பல் தாக்கும்போத பொலிசார் கைகட்டி வேடிக்கை பார்த்தது ஏன்? சம்பவ இடத்திலிருந்து எல்லோரையும் தப்பிச் செல்லவிட்டுவிட்டு அதன் பிறகு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய உதவுங்கள் என்று மக்களிடம் கோரிக்கை விடுத்தமை வேடிக்கையானது. இந்த சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் பின்னர் கைது செய்யப்பட்டனர். இன்னும் சிலர் சரணடைந்தனர். இவர்கள் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு பின்னர் விடுதலையும் செய்யப்பட்டனர்.
பெஷன் பெக் நிறுவனம் இவர்களை மன்னித்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையில் விருப்பத்தின் பேரில் வழங்கப்பட்ட மன்னிப்பா? அல்லது அச்சுறுத்தலா, நிர்ப்பந்தமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன என்கிறார் ஆஸாத் சாலி அவர்கள். மேலும் அவர்; தெரிவிக்கையில் ஹஸன் மௌலான விடயத்தில் தனக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாட்டை விசாரித்த அதே பொலிஸ் உயரதிகாரிதான் இந்த விடயத்தினையும் கையாண்டார். அன்று என்னுடைய விடயத்தில் ஹஸன் மௌலவி வாபஸ்பெற்றும் கூட கடமையில் கண்ணிமாக இருந்தார். அன்றைய கண்டிப்பு பெஷன்பெக் விடயத்தில் ஏன் காட்டவில்லை என்பதுதான் எனது கேள்வி” என்று கணைகள் தொடுத்திருந்தார் ஆஸாத் சாலி அவர்கள். அப்படி அவமானப்பட்டும், நிறுவனம் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தாலும் நிலமை முடிவுக்கு வந்துவிட்டால் சரி என்று அடுத்த பக்கம் திரும்பும்போது வேறொரு பிரச்சினை ஆரம்பமாகின்றது.
தான் அவமானப்பட்டாலும் பரவாயில்லை தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால்கள் என்பதை நிருபிக்கும் வகையில் வீண்வம்புகளை மேலும் மேலும் வாங்கிக் கட்டுகின்றார்கள். எந்த ஏழறைச் சனியன் பீடித்துள்ளதோ அவர்களை படைத்த இறைவனுக்குத்தான் வெளிச்சம். அந்தவகையில் தெமட்டக்கொடையிலுள்ள பள்ளிவாசல், இஸ்லாமிய புத்தக விற்பனை நிலையம் போன்றவற்றை மூடிவிடுமாறு இனவாதிகளான பொதுபலசேனாவின் கடிதத் தலைப்பில் அறிவித்திருந்தார்கள். பின்னர் விடயம் வெளிச்சத்திற்கு வந்தபோது நாம் இதனை செய்யவில்லை. எமது தலைப்பினைப் பயன்படுத்தி யாரோ இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார்கள். என்று மறுத்துரைத்தார்கள் பொதுபலசேனாவினர். இப்போது பொதுபல சேனாவிற்கு பல துக்ககரமான சம்பங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன போலும்.
அமைதியாகி விட்டார்கள் என்று உலமாசபையினரும் தனது பங்கிற்கு ஏதாவது நன்மை செய்யவேண்டுமே என்கிற நோக்கில் விசேடமாகக் கேட்கப்பட்டு வந்த துஆவை கேட்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த தொழுகையில் ஓதப்படும் துஆவுக்கே இவர்கள் பயந்து விட்டார்கள் இந்த பொதுப்பலசேனாவினர். ஏனென்றால் ஒரு கட்டத்தில் முஸ்லீம் அமைச்சர்களைப் பார்த்து நமது ஜனாதிபதி தொழுகையில் துஆ கேட்பது எதற்கு, ஆயும் கிடைக்கத்தானா இந்த துஆ என்றெல்லாம் நக்கல்பேச்சைப் பேசிய பெரும்பான்மையினரின் துன்பகரமான செயற்பாடுகளை தம்மைப் படைத்து ஆளுகின்ற இறைவன்மேல் பாரப்படுத்தியதன் விளைவு ஒருகாலகட்டத்தில் மார்பழகை ருசிப்பார்க்கத் துடித்து நாசமாய்போன கிறீஸ்மேன் கதைபோல ஆகிவிடுவோமோ இந்த பொ.ப.சே. என்கிற பயத்தினால் உலமா சபையினர் இதனை தடுத்து நிறுத்துவதன் மர்மம்மதான் என்ன? இறைவனிடம் கேட்பதால் ஒன்றும் நட்டம் ஏற்படபோவதில்லையே!
தற்போது முஸ்லீம் அமைச்சர்களின் பேச்சாடல்கள் மெல்ல மெல்ல வெளியிடப்படுகின்றன. அண்மையில் வாய்பொத்தி மௌனியாக இருந்த காத்தான்குடியின் சிம்மாசனம் அரசாங்கம் தொடர்ந்து மௌனமாகி இருந்தால் இந்த அரசுடன் முஸ்லீம் சமூகத்திற்குமிடையிலான உறவுக்கு பிரிவு ஏற்படலாம் என்று மனிசர் ஒரு போடு போட்டுள்ளார். வன்னிமைந்தன் பதவியை தூக்கிவீசத் தயார் என்றார். முகாவின் தலைமைப்பீடம் ஆடிய பக்கமெல்லாம் நாணல்புல் போல ஆடுகின்றது. சிலர் வாயே திறக்கவில்லை. இந்நிலையில் முஸ்லீம் சமூகத்தின் உறவு பாதிக்கப்படுமாம் என்கிற காத்தநகர் புதல்வருக்கு தெரியாதா விடயம். தற்போது முஸ்லீம் சமூகம் இந்த அரசுடன் எப்போதே இல்லை என்றாகிவிட்டது. நீங்கள் மாத்திரம்தான் (நம்மாளுகள் என்கிற தலைவர்கள் மட்டுமே) இன்றை ஆளும் ஆட்சியாளர்களுடன் ஒட்டிக் கொண்டுள்ளனர். இவ்வாறு நிலைமை இருக்க உறவுக்கு பிரிவு வரலாம் என்று கூறுவதெல்லாம் வீணவம்புக்கானது.
எனவே, இன்றைய யதார்த்தத்தை புரிந்து கொண்டு உலகின் பக்கம் இந்நாட்டு தமிழ் பேசும் மக்களின் நிலைமை உயரத்தில் வைக்கப்படுவதுபோல இந்நாட்டு முஸ்லீம்களும் தமிழ்பேசும் சமூகத்தின் ஒருபிரிவினர் என்கிற வகையில் இவ்வாறானவர்களின் வீண்வம்புகளிலிருந்து மீண்டுகொள்ள உலகத்தின் பார்வைக்குள் தமது பிரச்சினைகளைச் செலுத்;தி இந்நாட்டின் மார்க்கத்தின் அடிப்படையிலான சுதந்திர மீட்சிக்கும், முஸ்லீம் சமூகத்தின் எழுச்சிக்கும், மார்க்கத்தின் அடிப்படையிலான சிறப்பான வாழ்வுக்கும் மேல்மட்டப்பார்வைகள் பார்க்கப்படவேண்டும். இங்கு கொக்கரிக்கின்ற நம் தலைமைகள் அந்த மேல்மட்டப் பார்வைக்குள் செல்லவேண்டிய காலத்தை வீணடித்தால் தவிக்க வேண்டிவரும் எப்போது? தேர்தல் காலத்தில் நினைவிற் கொள்ளுங்கள்.