Published On: Sunday, April 07, 2013
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து இந்தியாவில் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்தும், இதில் ஐக்கிய நாடுகள் பேரவையை உடனடியாக தலையிடக் கோரி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் நேற்று சனிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் திருச்சி மாவட்டம் சார்பாக இந்த ஆர்ப்பாட்டம் திருச்சி சிங்காரதோப்பு காமராஜர் வளைவு அருகில் பர்மாவில் நடைபெற்றது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனப்படுகொலைகளை கண்டித்தும் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத வன்முறைகளை கண்டித்தும் இதில் ஐ.நா. பேரவை உடனடியாக தலையிடக் கோரியும் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க கோரியும் இந்த மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.

மாவட்ட தலைவர் அப்துல் ஹக்கிம் தலைமையில், மாவட்ட செயலாளர்(ம.ம.க) பைஸ் அஹமது, மாவட்ட பொருளாளர் இம்தியாஸ் அஹமது ஆகியோர்களின் முன்னிலையிலும், தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, மாவட்ட துணைத்தலைவர் முஹம்மது ரபீக் ,மாவட்ட வழக்கறிஞர் அணிச்செயலாளர் காஜா மொய்தீன் மற்றும் இஸ்லாமிய பிரச்சார பேரவை மாவட்ட செயலாளர் சையது முர்துஸா ஆகியோர்களின் கண்டன உரைகள் இடம்பெற்றன.

சிறப்பு அழைப்பாளராக ஜமாத்துல் உலமா சபை மாவட்ட செயலாயளர் மீரான் மிஸ்பாகி கலந்து கொண்டும் மற்றும் தமுமுக, மமக மாவட்ட நிர்வாகிகள் துணை நிர்வாகிகள், அணிநிர்வாகிகள், வார்டு, ஒன்றிய, பகுதி, கிளை கழக நிர்வாகிகளும், உறுப்பினர்களும், பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட செயலாளர் இப்ராஹிம்ஷா நன்றி கூறி நிறைவு செய்தார்கள்.
(சென்னையிலிருந்து சாஹுல் ஹமீது)