Published On: Wednesday, April 10, 2013
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் தொழுகை அறைக்கு கழிவு ஒயில் வீச்சு
யாழ். பல்கலைக்கழக முஸ்லிம் மாணவரின் தொழுகை அறைமீது நேற்று முன்தினம் இரவு கழிவு ஒயில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடன் குறித்த தொழுகை அறை திறக்கப்பட்டு முஸ்லிம் மாணவர்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

தொழுகை அறை திறக்கப்பட்டு சில தினங்களின் பின்னர் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை அங்கு கல்வி கற்கும் முஸ்லிம் மாணவர்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளதாக அங்கிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த அறையின் முன்பாக தொங்கவிடப்பட்டிருந்த முஸ்லிம் மாணவர் மன்றம் என்ற பெயர் பலகை சேதமாக்கப்பட்டது.
இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னிரவு 7 மணிவரை மாணவர்கள் இஸா தொழுகைக்காக நின்றுள்ளனர். இதன் பின்னர் நேற்று காலை வந்து பார்த்த போது அறையின் கதவு மற்றும் வெயி நிலத்தில் கழிவு ஒயில் அற்றப்பட்டிருந்தது.இத்தனைக்கும் உதவிப் பதிவாளர் நலச் சேவைகள் உள்ள அதிபாதுகாப்பு பிரதேசமாகும்.

இதுதவிர பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் மாவீரர் தின விளக்கேற்றலினால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு இறுக்கமாக போடப்பட்ட பின்னர் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு ஊழியர்களை மீறி யாருமே உள்ளே செல்ல முடியாத அளவிற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் இச்சம்பவம் ஈடம்பெற்றுள்ளமை அச்சத்தை அங்கு கல்வி கற்கும் மாணவரிடையே ஏற்படுத்தியுள்ளது.
காலை இச்சம்பவம் அவதானிக்கப்பட்டு சில மணிநேரத்தில் பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடனடியாக ஒயில் ஊற்றப்பட்டிருந்த பகுதி சுத்தம் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து முஸ்லிம் மாணவர் மன்ற உறுப்பினர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் முக்கிய கலந்துரையாடல் நடந்துள்ளது.
தற்போது நாடளாவிய ரீதியாக முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவமானது பெரும் உளத்தாக்கத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும். இது குறித்து முஸ்லீம் பிரமுகர்கள் மௌனமாக ஈருப்பதை மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
(பாறூக் சிகான்)