Published On: Tuesday, May 14, 2013
காத்தான்குடி மையவாடிக்காணி விவகாரம் ;13 பேருக்கு பிணை

காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயல் மையவாடி காணியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட கலவரம் தொடர்பில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை செய்திருந்தார்.
முறைப்பாட்டின்; பிரகாரம் 17 பேரின் பெயர்களை சந்தேக நபர்களென காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர். அதில் நான்கு பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.
அதில் காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயல் தலைவர் உட்பட நிர்வாகிகள் 7 பேரும் மற்றும் ஏனைய ஜமாஅத்தார்கள் 6 பேருமாக 13 பேர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரினால் திங்கட்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரணை செய்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா இவர்கள் 13பேரையும் தலா ஒரு இலட்சம் ரூபாசரீரப் பிணையில் விடுதலை செய்ததுடன் வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.
குறிப்பிட்ட சம்பவத்தன்று மேற்படி சந்தேக நபர்கள் காத்தான்குடி நகர சபையின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார்கள் மற்றும் கலவரத்தை தூண்டியதாகவும் குறித்த வழக்கில் அவர்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
கடந்த சனிக்கிழமையன்று காத்தான்குடி 6ஆம் குறிச்சி பிரதான வீதியிலுள்ள ஜாமியுழ்ழாபிரீன் மைய்யவாடிக்காணியை காத்தான்குடி நகரசபை கட்டிடமொன்று கட்டுவதற்காக வேலி போட்டு அடைத்துக் கொண்டிருந்தபோது அங்கு திரண்ட பொதுமக்கள் அவ் வேலியை உடைத்து வேலி கட்டைகளை பிடுங்கி எறிந்தனர்.
இதன்போது ஏற்பட்ட கலவரத்தில் 3பேர் காயமடைந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.