Published On: Sunday, October 19, 2014
ஒரு எருமையின் விலை 15 கோடி ரூபா: ஆண்டு வருமானம் 1 கோடி ரூபா
ஓர் எருமை இலங்கை நாணயப்படி சுமார் 15 கோடி ரூபாவுக்கு ஏலம் பேசப்பட்டுள்ளது. இருப்பினும் உரிமையாளர் அந்தவிலைக்குகூட எருமையை விற்கவில்லை. இனி யாரும் பிள்ளைகளை எருமை என்று திட்டமாட்டார்கள் என்று சந்தோசப்படலாம்.
உத்தரப் பிரதேசம் மீரட் நகரில் கால்நடைகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த கரம்வீர் சிங் என்பவரின் எருமை மிகச்சிறந்த எருமையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. முர்ரா வகையைச் சேர்ந்த யுவராஜ் என்ற அந்த எருமை 14 அடி நீளமும் 5 அடி 9 அங்குலம் உயரமும் கொண்டது. அதன் பராமரிப்புக்காக மாதம்தோறும் 53 ஆயிரரம் இந்தியா ரூபாவை கரம்வீர் சிங் செலவிடுகிறார்.
நாள்தோறும் 20 லீற்றர் பால் குடிக்கிறது. 5 கிலோ அப்பிள், 15 கிலோ கால்நடைத் தீவனங்களை உட்கொள்கிறது. தினமும் 4 கிலோ மீற்றர் தொலைவு நடைப்பயிற்சி மேற்கொள்கிறது. இந்த எருமையிடமிருந்து நாள்தோறும் 3.5 முதல் 5 மில்லி லீற்றர் வரை விந்தணு எடுக்கப்பட்டு 35 மில்லி லீற்றர் வரை செறிவாக்கம் செய்யப்படுகிறது. 0.25 மில்லி கொண்ட ஒரு விந்தணுக் குப்பி சுமார் 3200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதனை வாங்க கரம்வீர் சிங்கின் பண்ணையில் விவசாயிகள் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். அந்த வகையில் யுவராஜ் என்ற இந்த எருமை ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி ரூபா வரை உரிமையாளருக்கு சம்பாதித்து கொடுக்கிறது.
முர்ரா வகை எருமைகள் சராசரியாக நாளொன்றுக்கு 25 லீற்றர் வரை பால் கொடுக்கிறது. அதுவும் யுவராஜின் வாரிசுகள் அதிக வீரியமிக்கதாக இருப்பதால் 25 லீற்றரையும் தாண்டி பால் கொடுப்பதாகக் கூறப்படுகிறது.
