Published On: Sunday, October 19, 2014
ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை: இராணுவம் மறுப்பு
கடந்த செவ்வாய்க்கிழமை ஜானகி ஹோட்டலில் நடைபெற்ற ஊடகவியலாளர் ஒன்றுகூடலுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதை இராணுவம் மறுத்துள்ளது. புலனாய்வு செய்தி அறிக்கையிடல் தொடர்பாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் அமைப்பு கொழும்பில் ஏற்பாடு செய்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ள முடியாதென இராணுவம் முற்றாக நிராகரித்துள்ளது. எனினும், இந்த அச்சுறுத்தல்களுக்கும் இராணுவப்படையினருக்கும் தொடர்பு கிடையாது என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச கவனத்தினை ஈர்க்கும் நோக்கில் இவ்வாறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ச்சியாக வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்வதே இவ்வாறான குற்றச்சாட்டுக்களின் நோக்கமாகும் என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
நிகழ்வினை குழப்பும் நோக்கில் அச்சுறுத்தல் விடுத்தவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு புலனாய்வு ஊடகவியலாளர் செயற்குழு ஜனாதிபதி மற்றும் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது. இந்த முறைப்பாட்டை செய்துள்ளது. இதேவேளை, சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
