Published On: Friday, October 17, 2014
காமப்பிசாசுக்கு இரையான சிறுமி: காத்தான்குடியை உலுக்கிய கொடூரம்
மாணவிகளை பாடசாலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் தினமும் தங்களது வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். மகள் நேரத்துக்குச் சென்றாளா? நேரத்துக்கு வீடு திரும்பினாளா என்று கத்திமேல் நடந்துகொண்டிருக்கிறார்கள். சினிமாத்தனமான காதல் என்ற வலைக்குள் தங்களது மகள் வீழ்ந்து விடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறையுடன் இருக்கிறார்கள். தற்போது இதையும் தாண்டி திருமணம் முடிந்த சில கழுகுகளின் காமப் பார்வையிலிருந்தும் அவர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது.

பெண்பிள்ளை வயதுக்கு வந்தால் சில சயங்களில் அதை சடங்காகக் கொண்டாடுகிறார்கள். தங்களது மகள் திருமணத்துக்கு தயாராகிவிட்டாள் என்பதை உத்தியோகப்பற்ற முறையில் அறிவிக்கிறார்கள். அதன் பின்னர்தான் அப்பெண்ணுக்கு ஆண்களிடமிருந்து பல தொல்லைகள் ஆரம்பிக்கின்றன. ஆனால், இன்று அதையும் தாண்டி பருமடையாத சிறுமிகள் சில காமுகர்களின் பசிக்கு இரையாக்கப்படுகின்றனர். திருமணமானவர், திருமணமாகாதவர் என்ற வேறிபாடில்லாமல் காமுகர்கள் சிறுமிகளை வேட்டையாடுகின்றனர். அத்துடன் ஈவிரக்கமின்றி அவர்களை கொலையும் செய்யவும் துணிகின்றனர்.
இதபோன்ற சம்பவம் அண்மையில் காத்தான்குடியில் அரங்கேறியது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார பிரதியமைச்சரை தன்னகத்தே கொண்டிருந்த ஊரில்தான் இச்சம்பம் நடைபெற்றுள்ளது. மழை நேரத்தில் குடைக்குள் கூட்டிச்சென்ற பாவத்துக்காக சிறுமியை கற்பழித்து, கொலை செய்த கொடூரச் சம்பவம் இந்தவார கிரைம் பகுதியில் இடம்பெறுகிறது. காத்தான்குடி மட்டுமின்றி முழு நாட்டையும் அதிரவைத்த இச்சம்பவம் ஒரு செய்தியாக மட்டும் நின்றுவிடக்கூடாது. குறித்த சிறுமியின் மரணத்துக்கு நியாயம் கிடைக்கவேண்டும். இதுபோன்ற இன்னுமொரு வக்கிரமம் இனிமேல் நடைபெறாமல் பார்த்துக்கொள்வது அனைவரினதும் கடமையாகும்.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் பெரியதொரு ஊர் காத்தான்குடி. இஸ்லாமிய சூழலை தன்னகத்தே கொண்ட ஒரு தனித்துவமான அடையாளம்தான் இந்த ஊரின் சிறப்பு. மட்டக்களப்பு - காத்தான்குடி எல்லையில் மஞ்சந்தொடுவாயிலுள்ள குவைத் சிற்றி என்ற ஊரில் ஜின்னா வீதியில் மீராசாஹிப் சஹாப்தீன் தனது குடும்பத்துடன் வாழ்ந்துவந்தார்.
சஹாப்தீன் தனது வருமானத்துக்காக வீட்டுடன்கூடிய சில்லறைக் கடையொன்றை நடாத்தி வந்தார். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். மூத்த மகள் திருமணம் முடித்துவிட்டார். இரண்டாவது மகன் வெளிநாட்டு வேலைபார்த்துக் கொண்டிருக்கிறார். மூன்றாவது மகள் பாத்திமா சீமா. இவளுக்கு வயது ஒன்பது. சுமார் 12 வருடங்களின் பின்னர் சீமா பிறந்ததால், குடும்பத்தினர் அனைவரும் அவள்மேல் அதிக அன்பு வைத்திருந்தனர். கடைக்குட்டி என்பதாலும் அவள் பெற்றோரால் செல்லமாக வளர்க்கப்பட்டாள்.
காத்தான்குடி முதலாம் பிரிவிலுள்ள சாவிய்யா மகளிர் வித்தியாலயத்தில் சீமா தரம் மூன்றில் கல்வி கற்றுவந்தாள். படிப்பில் நல்ல கெட்டிக்காரி. மூன்றாம் ஆண்டில் படிக்கும்போதே புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்தாள். அதுபோல, குர்ஆன் மத்ராஸாவில் திறமையாக ஓதிவந்தாள். இவள் ஓதிவந்த இப்றாஹிமிய்யா குர்ஆன் மத்ரஸாவின் இறுதியாண்டு பரீட்சைக்கு தயாராகிக்கொண்டிருந்தாள்.
சம்பவ தினத்தன்று (செப்டெம்பர் 10, புதன்கிழமை) சீமாவுக்கு தடிமல் காய்ச்சல் என்பதால் அன்று குர்ஆன் மத்ரஸாவுக்குச் செல்லவில்லை. தாயார் அஸர் நேர தொழுகையில் ஈடுபட்டிருந்தார். தந்தை கடைக்குள் கண்ணயர்ந்தார். இதனால் சீமாவின் தாயின் உம்மா (மூத்தம்மா) கடையை கவனித்துக்கொண்டிருந்தார். அந்நேரம் மழை பெய்துகொண்டிருந்தது. விடுமுறையில் இருந்த சீமா மழையைக் கண்டதும் கொண்டாட்டம். மழைக்குள் தனது குடையைப் பிடித்துக்கொண்டு விளையாடி மகிழ்ந்தாள்.
இதேநேரம் றமலான் என்பவன் பீடி வாங்குவதற்காக சீமாவின் தந்தையுடைய கடைக்கு வந்தான். காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட இவன், பதியத்தலாவையில் திருமணம் முடித்து அங்கேயே வசித்துவருகிறான். சீமாவின் வீட்டிலிருந்து சில வீடுகளுக்கு அப்பால் இவனது சகோதரனின் வீடு உள்ளது. அங்கு வந்திருந்த றமலான், பீடியை வாங்கிக்கொண்டு மழைக்காக கடையோரத்தில் ஒதுங்கினான். பின்னர், தன்னை குடைக்குள் அழைத்துச் சென்று தனது சகோதரியின் வீட்டில் விடுமாறு மூத்தம்மாவிடம் கேட்டான்.
இளகிய மனமுடைய மூத்தம்மா, சீமாவை அழைத்து மாமாவை குடைக்குள் கூட்டிச்சென்று விட்டுவிட்டு வருமாறு கூறினார். தனது பேத்தியை ஒரு காமப் பிசாசிடம் அனுப்புகிறோம் என்று சற்றும் தெரியாமல் மூத்தம்மா சீமாவை வழியனுப்பி வைத்தார். எதுவுமே அறியாத பிஞ்சு மனமும் இதுதான் தனது கடைசிப் பயணம் என்பதை அறியாதவளாக அவனை குடைக்குள் கூட்டிச்சென்றாள். கடிகாரம் 4:45ஐக் காட்டியது.
றமலானை கூட்டிக்கொண்டு சென்ற சீமா விடுதிரும்பவில்லை. மூத்தம்மாவுக்கு பதற்றமாகிறது. தாய் பதைபதைத்து தனது மகளைத் தேட ஆரம்பிக்கிறார். சீமாவைக் காணவில்லை. கடைக்குள் கண்ணயர்ந்த தனது கணவனை எழுப்பி, சீமாவைத் தேடச் சொல்கிறார். எல்லோரும் தேடுகின்றனர். நேரம் 5 மணியைத் தாண்டிவிட்டது. ஆனால், சீமாதான் கிடைத்தபாடில்லை.
சீமா குடைக்குள் கூட்டிச்சென்ற றமலான் தங்கியிருந்த அவனுடைய சகோதரனின் வீட்டைநோக்கி நடையைக் கட்டுகிறார் சஹாப்தீன். வீடு பூட்டிக்கிடக்கிறது. பதற்றம் இன்னும் அதிகரிக்கிறது. பின்னர் றமலான் அவனுடைய சகோதரியின் வீட்டுக்கு முன்னால் நிற்பதை பெற்றோர் காண்கின்றனர். உடனே அவனிடம் சென்று, சீமா எங்கேவென்று கேட்டனர். அதற்கவன், தனது முகத்தை பவ்வியமாக வைத்துக்கொண்டு பதிலளித்தான். "சீமா ஒரு நீல கலர் ஆட்டோக்காரனிடம் பேசிக்கொண்டிருந்தாள். ஒருவேளை அதி்ல் போயிருப்பாள்" என்று லாவகமாக கூறிவிட்டு இருந்த இடமில்லாமல் தலைமறைவானான்.
நேரம் 5.30 மணியாகின்றது. தேடுதல் வேட்டையில் தோல்வியடைந்த பெற்றோர், இறுதியாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவுசெய்தனர். பிறகு தகவல் எல்லா இடங்களிலும் பரவியது. குவைத் சிற்றியில் பதற்றம் உருவாகுகிறது. பொலிஸ் நிலையத்திலிருந்து வந்த போக்குவரத்துப் பொலிஸார் இருவரும் சம்பவத்தை கேட்டறிந்துகொண்டனர். றமலான் இறுதியாக நின்று பதலளித்த அவனது சகோதரியின் வீட்டின்மீது சந்தேகம் வலுக்கிறது.
றமலானின் சகோதரி பதியத்தலாவையிலுள்ள அவனது மனைவியின் வீட்டில் இருந்தார். இதனால் அதன் சாவி றமலானிடம் இருந்த விடயம் யாருக்கும் தெரியவில்லை. தகரத்திலான அந்த குடிசை வீடு பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. பூட்டிய வீட்டை சோதனையிடமால், போக்குவரத்துப் பொலிஸார் அங்கேயே நின்றனர். பின்னர் ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி. வெதகதர அந்த வீட்டை உடைப்பதற்கு உத்தரவிட்டார். அது தகரத்திலான குடிசை என்பதால் அதை உடைப்பதற்கு அவர்கள் சிரமப்படவில்லை.
உடைத்த வீட்டுக்குள் புகுந்த சீமாவின் குடும்பத்தினரும், பொலிஸாரும் சிறுமியை அங்குமிங்கும் தேடினர். அந்தக் குடிசைக்குள் இரண்டு கட்டில்கள் கிடந்தன. அதில் ஒரு கட்டிலுக்கு அடியில் சீமாவின் முகத்தில் இரத்தம்தோய்ந்த நிலையில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாய்க்குள் துணி திணிக்கப்பட்டவாறு உரப்பைக்குள் குற்றுயிராய்க் கிடந்தாள். தந்தையின் சகோதரரே சீமாவைக் கண்டுபிடித்தார்.
சிறுமியை இந்தக் கோலத்தில் கண்ட பெற்றோர்கள் கதறியழுதனர். பின்னர் உடனடியாக சீமாவை காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். சிறுமி ஆபாயக் கட்டத்திலிருப்பதை உணர்ந்த வைத்தியர்கள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு திருப்பியனுப்பினர். வைத்தியசாலைக்குச் செல்லும் வழியிலேயே சீமாவின் உயிர் இந்த உலகைவிட்டம் பிரிந்தது. பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சீமாவின் ஜனாஸா, பிரேத பரிசோனைக்காக பொலநறுவை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது.
இந்த கொலை சீமாவின் பெற்றோர் மாத்திரமின்றி முழு காத்தான்குடியே சோகத்தில் ஆழ்த்தியது. சம்பவ இடத்துக்கு மக்கள் அணியணியாக திரண்டு வந்தனர். மறுமுனையின் சந்தேக நபரைத் தேடி பொலிஸார் வலைவிரித்தனர். சந்தேகநபரான றமலான் காத்தான்குடியிலிருந்து தலைமறைவாகி விட்டான். பதியத்தலாவையில் ஒரு சிங்களப் பெண்ணை திருமணம் முடித்துள்ள றமலான் ஹோட்டலில் டீ தயாரிப்பாளராக வேலைபார்த்து வந்தான். இவனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர்.
றமலானின் தகவல்களை சேகரித்துக்கொண்ட காத்தான்குடி பொலிஸ்நிலைய அதிகாரி எஸ்.ஐ. சந்திரசேன தலைமையிலான குழுவினர் வியாழக்கிழமை அதிகாலை பதியத்தலாவை நோக்கிப் புறப்பட்டனர். றமலானின் வீட்டுக்குச் சென்றபோது அவன் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். பொலிஸாரும் சிரமப்படாமல், அவனைக் கைதுசெய்து காத்தான்குடி பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
சீமாவை தான் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்ததாக தனது தனது வாக்குமூலத்தில் றமலான் ஒப்புக்கொண்டான். அத்துடன் 1998ஆம் ஆண்டு சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 3 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தமையும் அம்பலத்துக்கு வந்தது.
பொலிஸ் விசாரணையின் பின்னர் சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்காக கொண்டு சென்றபோது, நீதிமன்றத்துக்கு முன்னாள் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், பலத்த பாதுகாப்புடன் சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி என்.எம்.அப்துல்லாஹ் சந்தேகநபரை 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
பிரேதப் பரிசோதனையின் பின்னர் சிறுமியின் ஜனாஸா காத்தான்குடிக்கு கொண்டு வரப்பட்டது. வியாழக்கிழமை இரவு இஷா தொழுகையின் பின்னர் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு, காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொண்ட பெருந்திரளான மக்கள் கண்ணீருடன் மையவாடியிலிருந்து வீடுதிரும்பினர்.
கழுத்தை நெரித்து குற்றுயிராய்க் கிடந்த நிலையிலேயே சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலநறுவை வைத்தியசாலையில் நடாத்தப்பட்ட பிரதே பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்த அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே இதன் உண்மைத்தன்மை வெளிவரும்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் குறித்த சந்தேகநபருக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் ஆஜராக்கூடாது என்றும், சந்தேகநபருக்கு தக்க தண்டனை வழங்கக்கோரியும் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. இந்தக் கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்று மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்துக்கும், காத்தான்குடி பிரதேச செயலாளருக்கும் பொதுமக்களால் கையளிக்கப்பட்டன. இதுவரை எந்தவொரு சட்டத்தரணியும் குறித்த சந்தேகநபருக்கு ஆதரவாக ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மறுமுனையில், சம்பவத்துடன் தொடர்புடைய றமழான் என்பவன் மனநோயாளி என்று கதை பரவிவருகிறது. மனநோயாளிகள் வைத்திருக்கும் மஞ்சள் நிற அடையாள அட்டை தன்னிடம் இருப்பதாக பொலிஸாரிடம் காண்பித்துள்ளான். இதனால், காத்தான்குடியை உலுக்கிய ஒரு கொடூரச் சம்பவத்தின் சூத்திரதாரி தண்டனையின்றி விடுவிக்கப்படலாம் என்ற அச்சம் மக்களிடையே பரவியுள்ளது. சந்தேகநபர் மனநோயாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்து விடுதலை செய்தால், அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாரில்லையென பிரதேசவாசிகள் நவமணிக்கு தெரிவித்தனர்.
"எனது மகளை கொடூரமாக கொலை செய்தவனுக்கு தகுந்த தண்டனை வழங்கவேண்டும். அவ்வாறு முடியாவிட்டால் அவனை என்னிடம் ஒப்படையுங்கள். என்னை தூக்கிலிட்டாலும் பரவாயில்லை, அவனுக்கு நான் தகுந்த தண்டனை வழங்குவேன்" என சீமாவின் தந்தை சஹாப்தீன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். "அவன் பைத்தியகாரன் என்பது பொய்யான செய்தி. ஒரு பைத்தியகாரன் இந்தளவு கொடூரமான ஒரு செயலை செய்திருக்கமாட்டான்" என அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுமியை உருக்குலைத்து உரைப்பைக்குள் அடைத்துவிட்டு, எதுவுமே நடக்காததுபோல சீமா ஆட்டோவில் ஏறிச் சென்றிருக்கலாமென, ஆட்டோவின் நிறத்தையும் தெளிவாக குறிப்பிட்டுக் கூறிவிட்டு தப்பிச்செல்லும் இவன் எப்படி ஒரு மனநோயாளியாக இருக்கலாம்? பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் சிறுமியை அடைத்துவிட்டு, வீட்டை அப்படியே இருந்தமாதிரி பூட்டிவிட்டுப் போவதற்கு எந்த மனநோயாளிக்கு யோசனை வரும்?
இந்தளவு கொடூரமான செயலில் ஈடுபட்ட சந்தேகநபரை சட்டம் கடுமையாக தண்டிக்கவேண்டும். ஒருவேளை அவன் மனநோயாளியாக இருந்தாலும் அந்த ஓட்டையை வைத்து அவன் தப்பிப்பதற்கு சட்டம் இடமளிக்கூடாது. அவ்வாறு அவன் தப்பிச் சென்றால், 1998இல் ஒரு சிறுவன், 2014இல் சீமா அடுத்த வருடம் இன்னொருவர் சிறுமியோ சிறுவனோ என்று பட்டியல் நீண்டுகொண்டே செல்லலாம். இனிவரும் காலங்களில் மனநோயாளிகளும் குற்றங்கள் செய்யாதளவு சட்டம் கடுமையாக்கப்படவேண்டும்.
துள்ளி விளையாடிய சீமா இல்லாமல் தினமும் கதறியழும் சஹாப்தீனின் குடும்பத்துக்கு நீதி கிடைக்கவேண்டும். இதையே காத்தான்குடி சமூகம் மாத்திரமின்றி முழுநாடும் எதிர்பார்த்து நிற்கிறது.
(பிறவ்ஸ் முஹம்மட்)