எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய துருவம் புதிய மின்னஞ்சல் முகவரி: thuruvamnews@gmail.com சகலரும் இதனுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, October 21, 2014

மகிந்தவுக்கான மு.கா.வின் ஆதரவும் அதனால் கிடைக்கும் வரப்பிரசாதங்களும்

Print Friendly and PDF


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளிப்பதை அக்கட்சி மறுத்துவந்தாலும், பல வரப்பிரசாதங்களுக்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவை ஆதரவளிக்கவுள்ளதாக நம்பகரமான தகவல்கள் வெளிவந்துள்ளன.


முஸ்லிம் காங்கிரஸ் தனது கட்சிக்கும் அதில் அங்கம்வகிக்கும் அரசியல்வாதிகளுக்கும் பல வரப்பிசாதங்கள் அடங்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் குடும்பத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் உறுதிமொழிகளை வழங்கியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவுக்கே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்தது. பல மேடைகளில் அதற்காக பீரங்கிப் பிரசாங்களும் நடத்தியது. பொன்சேகா தோல்வியடைந்த பின்னர் நாங்கள் மீண்டும் அந்த தவறை செய்யமாட்டோம். இனி தொடர்ந்தும் உங்களது அரசாங்கத்துக்கே ஆதரவளிப்போம் எனக்கூறி அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டது.

முஸ்லிம்களுக்காக பல்வேறு பிரச்சினைகள் எழுந்தபோதும், அரசிலிருந்து விலகுமாறு முஸ்லிம்கள் அழுத்தங்கள் விடுத்தும் மு.கா. அரசிலிருந்து விலகவில்லை. அத்துடன் ஜனாதிபதி, நீங்கள் தாரளமாக அரசிலிருந்து போகலாம் என்று கூறியும் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடனேயே ஒட்டிக்கொண்டிருக்கிறது. தங்களது அரசியல் பதவிகளையும், இலாபங்களையும் பாதுகாத்துக்கொள்வதற்காக முஸ்லிம் மக்களை காரணம்காட்டி அரசுடன் சுகபோகம் அனுபவித்து வருகிறது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவளிப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள கோரிக்கைகள் வருமாறு;

முதற்கட்டமாக கட்சியின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக் மற்றும் அஸ்லம் ஆகியோருக்கு பிரதியமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளது. ஹரீஸ் எம்.பி.க்கு பிரதியமைச்சு பதவி வழங்குவதற்கு மந்திராலோசனை நடைபெற்றதாக அண்மைக்காலங்களில் பேசப்பட்டது.

மேலும் கட்சித் தலைவரின் உறவினர்களில் ஒருவருக்கு வெளிநாடொன்றுக்கான தூதுவர் பதவியும், இன்னொருவருக்கு கூட்டுத்தாபனமொன்றின் தலைவர் பதவியும் வழங்கப்படவுள்ளது. அமைச்சர் ரவூப் ஹக்கீமும் தற்போதைய அமைச்சை விட அதிகாரம் கொண்ட அமைச்சுப் பதவியொன்றுக்கு நியமிக்கப்படவுள்ளார். பெரும்பாலும் கல்வித்துறையுடன் அல்லது அபிவிருத்தி சம்பந்தப்பட்ட அமைச்சுப் பதவியொன்று அவருக்கு கிடைக்கலாம்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் வழங்கும் ஆதரவுக்கு நன்றிக்கடனாக அக்கட்சியின் ஊடக ஆலோசகரை எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின்போது சுதந்திரக் கட்சியின் ஊடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்வதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இவற்றோடு இணைந்ததாக கிழக்கு மற்றும் மேல் மாகாண சபைகளில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினர்கள் இருவருக்கு அதிகாரமற்ற, வசதிவாய்ப்புகள் கொண்ட பதவிகள் வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் மேற்கண்ட கோரிக்கைகள் தொடர்பில் ராஜபக்ஷ குடும்பத்தின் பலம்வாய்ந்த அமைச்சர் ஒருவர் அரசாங்கத்தின் சார்பில் மேற்கண்ட உறுதிமொழிகளை வழங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அமைச்சர் ஹக்கீம் மட்டக்களப்பில் போட்டியிடவுள்ளார். ஆளும்கட்சியின் வேட்பாளர் அணித் தலைவர் பொறுப்பும் அவருக்கு வழங்கப்படவுள்ளது.

அமைச்சர் ஹக்கீம் தற்போது கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். அடுத்த பொதுத் தேர்தலின்போது ஹக்கீமுக்குப் பதிலாக அவரது மருமகன் கண்டியில் போட்டியிடவுள்ளார். எனினும் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பங்காளிக் கட்சியான அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியில் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் மூலம் கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் இருந்து எழும் எதிர்ப்புகளை சமாளிக்க முடியும் என்று கட்சித் தலைமை நம்புகிறது.

இதன்மூலம் முஸ்லிம்களின் எதிர்கால அரசியல் நலன்களை விட தனது நலன்களுக்கு மாத்திரமே ஹக்கீம் முன்னுரிமை கொடுப்பதாக பலரும் குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர்.

Related News
 

Sign Up to Thuruvam Newsletter

© 2014 THURUVAM NEWS All Rights Reserved
|
Call us on (+94) 71 35 45 45 2