Published On: Wednesday, August 05, 2015
இனவாதத் தீயை பரப்பும் கடும்போக்காளர்களின் வாய்களுக்கு நல்லாட்சி அரசு வெகு விரைவில் பூட்டுப் போடுமா..? - மசூர் மௌலானா
நாட்டில் மறுபடியும் இனவாதத் தீயை பரப்பும் நோக்கத்தில் பசுந்தோல் போர்த்திய புலியை போன்ற தோரணையிலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் அடையாளத்துடனும் கடும் போக்கு அமைப்புகள் செயற்பட்டுக் கொண்டிருப்பதை இனியும் முஸ்லிம்கள் சகித்துக் கொண்டிருக்க முடியாது.
முஸ்லிம்கள் இந்த நாட்டில் வந்தேறு குடிகளல்லர், பூர்விகமாக இங்கு பிறந்து வளர்ந்து தாய் நாட்டை நேசித்து வருகின்றனர். முஸ்லிம்களின் வரலாற்றை இனவாதிகள் திரிபுபடுத்த முனைகின்றனர். இதனை நாம் எல்லோரும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.
கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட விஷமப் பிரச்சாரங்களை தோற்றுவித்து, பாரிய அழிவுகளை விளைவித்த கடும் போக்காளர்கள் மீண்டும் இந்த தேர்தல் காலத்தில் களமிறங்கியிருப்பது முஸ்லிம்களை கவலை கொள்ளச் செய்கிறது.
அணமைய நாட்களில் இணையங்களிலும்,சமூக வலைத்தளங்களிலும் முஸ்லிம்கள் மீதான காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தும் ஒளிப் பேழையொன்று, கடும் போக்கு அமைப்பில் தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர் ஒருவர் பேசுவது போல் பரப்பபட்டு வருகிறது.
இதில் எமது புனிதமான குர்ஆனையும் அவமதித்து கேள்விக்குட்படுத்தும் வகையில் அவர் பேசுவதை காணக் கூடியதாய் இருக்கிறது. முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் அவர் கீழ்த்தரமான வார்த்தை பிரயோகங்களால் அவமதிப்பது தெரிகிறது.
நாட்டில் பொதுத் தேர்தல் சூடு பிடித்துள்ள இந்த நாட்களில் இவ்வாறான இனவாதப் பிரச்சாரங்கள் முஸ்லிம்களின் இருப்பையும் வாழ்வியலையும் மோசமாக சித்தரித்து, இனவாதமின்றி செயற்படும் ஏனைய சகோதர மக்களை முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழச் செய்கிறது. பாம்பின் விஷம் கக்கும் விஷமப் பிரச்சாரங்கள் நாட்டில் விரும்பத் தகாத எதிர்வினைகளை ஏற்படுத்தும் என்பதை யாரும் மறந்து விட முடியாது.
எனவே,நாட்டில் வன்முறையை ஏற்படுத்த தூபமிடும் கடும் போக்காளர்களின் இந்த இனவாதம் கக்கும் பிரச்சாரங்களை உடனடியாக தேர்தல் ஆணையாளருக்கு எத்தி வைக்க வேண்டும். நமக்குள் தேர்தல் வாக்குகளுக்காய் அடிபட்டுக் கொள்ளும் நாம் நமக்கு வெளியில் இருந்து வரும் எதிர்ப்புகளையும் கோஷங்களையும் செவிமடுக்காது அலட்சியமாய் விட்டு விடுகிறோம். இதுவே எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்த வழி வகுக்கும்.
ஒரு இனத்திற்கு அல்லது மதத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் வகையில் தேர்தல் பிரச்சாரம் செய்வோருக்கு சட்டம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ள நிலையில், இவ்வாறான இனங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த முனைகின்ற தீய சக்திகளின் இனவாத வேலைத்திட்டங்களை நல்லாட்சி அரசு முடக்க வேண்டுமென தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்.
ஆதலால், நாம் அனைவரும் ஒற்றுமைப்பட்டு எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கு ஏற்படவிருக்கும் பாரிய சவால்களை முறியடிக்க அணி திரளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஊடகப்பிரிவு
அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா
சமூக சிந்தனையாளர்
இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர்
