Published On: Friday, August 21, 2015
இலங்கை - இந்தியா இடையில் வலுவான வர்த்தக, கலாசார மற்றும் பண்பாடு ரீதியான தொடர்புகள் இருந்ததை பண்டைய நாணயங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் நிரூபிக்கின்றன
பண்டைய காலத்தில், இலங்கை - இந்தியா இடையில், வலுவான வர்த்தக, கலாசார மற்றும் பண்பாடு ரீதியான தொடர்புகள் இருந்ததை, பண்டைய நாணயங்கள் மற்றும் தொல்பொருள் ஆய்வுகள் நிரூபிக்கின்றன என, பிரான்ஸ் நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஆஸ்மன்ட் போபியார்ச்சி தெரிவித்துள்ளார்.
சி.பி.ராமசாமி அய்யர் இந்தியவியல் ஆய்வு மையம், தமிழ்நாடு நாணயவியல் கழகம் மற்றும், 'ரீச்' அறக்கட்டளை ஆகியவை இணைந்து, இந்தியா - இலங்கை கடல் வாணிப தொடர்புகளுக்கான தொல்பொருள் மற்றும் நாணயவியல் ஆதாரங்கள் குறித்த கருத்தரங்கு, சென்னை, ஆழ்வார் பேட்டை சி.பி.ஆர்., மையத்தில் நடந்தது. சி.பி.ஆர்., இந்தியவியல் ஆய்வு மைய இயக்குனர் நந்திதா கிருஷ்ணா வரவேற்புரையாற்றினார். 'ரீச்' அறக்கட்டளை இயக்குனர், டி.சத்தியமூர்த்தி வாழ்த்துரையாற்றினார்.
தமிழ்நாடு நாணயவியல் கழகத் தலைவர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார். பிரான்ஸ் நாட்டின் அறிவியல் ஆய்வுக்கான தேசிய மைய இயக்குனர் மற்றும் தொல்பொருள் ஆய்வாளர் ஆஸ்மன்ட் போபியார்ச்சி பங்கேற்று, 'பவர் பாயின்ட் பிரசன்டேஷன்' மூலம், படங்களுடன், இந்திய - இலங்கை தொல்பொருள் ஆய்வுகள் குறித்த ஆவணங்களை காட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது:தொல்பொருள் மற்றும் நாணயவியல் ஆய்வில், நாணயவியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி, எனக்கு நீண்ட கால நண்பர் மட்டுமின்றி, என் ஆய்வுக்கான வழிகாட்டி. இலங்கையை பொறுத்தவரை ஆசிய நாடுகளில், சீனா மற்றும் அரேபிய நாடுகளை இணைக்கும் வர்த்தக மையமாக, தென் இந்தியாவுக்கு அருகில் அமைந்துள்ளது. வணிகர்கள், துறவிகள், தத்துவவியலாளர்கள் என பல வகைகளில், இந்த உறவுகள் வளர்ந்துள்ளன.
இதில், இலங்கையிலுள்ள கொடவயா கடல் பகுதி முக்கிய கடல் வாணிப தளமாக இருந்துள்ளதை, பல ஆய்வுகள் நிரூபிக்கின்றன. அங்கே நடத்திய ஆய்வில், தமிழகத்தில் முந்தைய காலத்தில் பயன்படுத்திய அரை கற்கள் (அம்மி) பல கண்டெடுக்கப்பட்டன.இதுபோன்ற கற்களில், தமிழக கலாசாரங்களை கூறும் நந்தி பாதம், ஸ்ரீவத்சவா மற்றும் பாண்டிய மன்னர்களின் மீன் சின்னம் போன்றவை இடம் பெற்றிருந்தன. இந்த துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்களில், பண்டைய, 'பிராமி' எழுத்துகள் உள்ளன. இங்கு மூதாதையர்கள் பயன்படுத்திய கப்பல்களின் பாகங்களும், களி மண்ணாலான வண்ணப் பானைகளும் கண்டெடுக்கப் பட்டன.
தமிழகத்தில், கொடுமணல், அரிக்கமேடு போன்ற இடங்களில் கண்டறியப்பட்ட பல சிலைகள், நாணயங்கள் இலங்கையிலும் கண்டறியப்பட்டன. புத்தரின் உருவம் பொறித்த கற்கள், இலங்கையிலும் கண்டறியப்பட்டன. தமிழகத்தில் உள்ள, கையில் சிலம்புடன் கூடிய கண்ணகியின் சிலை, இலங்கையில், பத்தினி கடவுளாகவும், முருகர் சிலை, கண்டி கதிர்காம முருகர் என்றும் காணப்படுகிறது. இதேபோல், ரோமன் கால நாணயங்கள், எல்லோரா ஓவியங்கள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் சிற்பங்களையும் இலங்கையில் கண்டுபிடித்துள்ளோம்.
தமிழகத்தில், பல்லவர் கால சிற்பங்கள், நடராஜரின் வடிவம் போன்றவற்றை அப்படியே இலங்கையில் சிற்பமாக காணலாம். காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலின் சிற்பங்களின் பெரும்பாலான வடிவங்கள், இலங்கையிலுள்ள கோவில்கள் மற்றும் வரலாற்றுத் தலங்களில் தெளிவாக இடம்பெற்றுள்ளன.
இந்த ஆதாரங்களின் மூலம், தமிழகமும், இலங்கையும் கடல் வாணிபத்தில் மிகவும் நெருக்கமாக இருந்தது மட்டுமின்றி, கலாசாரம், பண்பாடு, வழிபாடு முறைகளிலும் நெருங்கிய உறவுகள் இருந்ததை, இந்த நாணயங்களும், சிற்பங்களும், எழுத்துகளும் நிரூபிக்கின்றன.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியின் முடிவில், சி.பி.ஆர்., இந்தியவியல் ஆய்வு மைய வரலாற்று படிப்புக்கான தலைவர் பேராசிரியர் ஜி.ஜே.சுதாகர் நன்றி தெரிவித்தார்.