Published On: Saturday, August 22, 2015
இளங்கோவனை கண்டித்து திருச்சியில் போராட்டம்
இளங்கோவனை கண்டித்து நடந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது அ.தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். குமார் எம்.பி. உள்பட 170 பேரை போலீசார் கைது செய்தனர்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் பிரதமர் மோடி சந்தித்தது குறித்து விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. இளைஞர் பாசறை சார்பில் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சல மன்றத்தை முற்றுகையிடப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனையொட்டி அந்த பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பூட்டுபோட்டு காங்கிரசார் யாரையும் போலீசார் உள்ளே அனுமதிக்கவில்லை. அலுவலகத்தை சுற்றி இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது.
பகல் 12.30 மணி அளவில் பாசறை மாநில செயலாளர் குமார் எம்.பி. தலைமையில் அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் மாரீஸ் தியேட்டர் அருகே குவிந்தனர். அங்கிருந்து ஊர்வலமாக காங்கிரஸ் அலுவலகத்தை நோக்கி கட்சி கொடிகளுடன் சென்றனர், இளங்கோவனை கண்டித்து கோஷம் எழுப்பியபடி காங்கிரஸ் அலுவலகம் முன்பு கூடினர்.அப்போது அ.தி.மு.க.வினர் ஆவேசத்துடன் காங்கிரஸ் கட்சி அலுவலகம் மீது கற்கள், செருப்பு, தக்காளி, முட்டை போன்றவைகளை வீசி சரமாரியாக தாக்கினார்கள். இதில் காங்கிரஸ் கட்சி அலுவலக கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. அங்கிருந்த விளம்பர பதாகையை கிழித்து எறிந்தனர்.
உடனே போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதில் போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே கடுமையான தள்ளு, முள்ளு ஏற்பட்டது. சில தொண்டர்கள் போலீசாரின் எதிர்ப்பையும் மீறி காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்குள் ஏறி குதிக்க முயன்றனர். ஆனால் அவர்களை போலீசார் தடுத்து அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
இளங்கோவன் உருவபொம்மையை சிலர் எரிப்பதற்காக தூக்கிவந்தனர். ஆனால் உருவபொம்மையை போலீசார் கைப்பற்றினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அந்த வழியாக சென்ற பஸ்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.இதற்கிடையே அ.தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தியதை கண்டித்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர்.
அ.தி.மு.க.வினரை கைது செய்யக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். திடீரென அவர்கள் நெருங்கி வந்ததால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. உடனே போலீசார் காங்கிரசாரை தடுத்து நிறுத்தியதால் அவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.போலீசார் போராட்டம் நடத்திய குமார் எம்.பி. உள்பட அ.தி.மு.க.வினரை கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அப்போது மீண்டும் அ.தி.மு.க. தொண்டர்கள் சிலர் காங்கிரஸ் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினார்கள். உடனே போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தியதில் சிலர் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் அனைவரையும் கைது செய்து வேனில் ஏற்றினர். 50 பெண்கள் உள்பட 170 பேர் கைது செய்யப்பட்டனர்.
அ.தி.மு.க.வினர் போராட்டம் முடிந்த சிறிது நேரத்தில் காங்கிரசார் கட்சி அலுவலகத்தில் பூட்டை திறந்து உள்ளே சென்றனர். அலுவலகத்திற்குள் கண்ணாடி சிதறல்கள், கற்கள், செருப்பு, முட்டை போன்றவை சிதறி கிடந்ததை கண்டு ஆவேசம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய அ.தி.மு.க.வினரை சிறையில் அடைக்க வேண்டும் என்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது, அங்கு வந்த காங்கிரஸ் நிர்வாகிகள் வழக்கறிஞர் சரவணன், வில்ஸ் முத்துக்குமார், ஜிஎம்ஜி மகேந்திரன், ஜெகதீஸ்வரி உள்ளிட்ட சிலர், அதிமுகவினரைக் கண்டித்து முழக் கங்களை எழுப்பியவாறு கம்புகளுடன் அவர்களை நோக்கிச் சென்றனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.தகவலறிந்து காங்கிரஸ் மாவட் டத் தலைவர்கள் ஆர்.சி.பாபு, ஜெயப் பிரகாஷ் அங்கு வந்தனர். எம்பி குமாரை கைது செய்ய வலி யுறுத்தி முழக்கங்களை அவர்கள் எழுப்பினர். மேலும் சாலை மறிய லில் ஈடுபட முயன்ற அவர்களை போலீஸார் சமாதானம் செய்தனர்.
தாக்குதல் தொடர்பாக எம்பி குமார் உள்ளிட்ட அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டை காவல் நிலையத்தில் ஆர்.சி.பாபு புகார் கொடுத்தார். மேலும், குமாரை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு ஃபேக்ஸ் அனுப்பினார்.





