Published On: Saturday, August 22, 2015
யதார்த்தங்களை பிரதிபலிக்கிற வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் வேண்டும்
யதார்த்தங்களை பிரதிபலிக்கிற வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் வேண்டும் என்று இந்திய, பசிபிக் தீவு நாடுகள் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இந்திய, பசிபிக் தீவு நாடுகள் உச்சி மாநாட்டை ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து பேசினார்.இந்த மாநாட்டில் பசிபிக் தீவு நாடுகளான பிஜி, பப்புவா நியூ கினியா, குக் தீவுகள், டொங்கா, டுவாலு, நாவ்ரு, கிரிபட்டி, வனுவாட்டு, சாலமன் தீவுகள், சமாவ், நையு, பலாவ், மைக்ரோனேசியா, மார்ஷல் தீவுகள் ஆகியவற்றில் இருந்து 3 ஜனாதிபதிகள், ஒரு துணை ஜனாதிபதி, 6 பிரதமர்கள், ஒரு துணை பிரதமர், 2 மந்திரிகள், ஒரு சிறப்பு தூதர் பங்கேற்றனர்.இந்த மாநாட்டில் பேசியபோது பிரதமர் மோடி, இந்திய, பசிபிக் தீவு நாடுகள் வர்த்தக அலுவலகம் டெல்லியில் தொடங்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது:புதிய சகாப்தத்தின் முனையில் நாம் இருக்கிறோம். விண்வெளியை போன்று பெருங்கடல்களும் நமது பொருளாதாரத்தின் முக்கிய இயக்குசக்தி ஆகும். அவற்றை தொடர்ந்து பயன்படுத்துகிறபோது, அவை நமக்கு வளத்தை கொண்டு வரும். மீன் வளத்துக்கு அப்பால், தூய்மையான எரிசக்தி, புதிய மருந்துகள், உணவு பாதுகாப்பினை தரும்.
அதேபோன்றுதான் நமது உலகளாவிய சவால்களும் அமைந்துள்ளன. வெப்பமயமாதல், பசிபிக் தீவுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.பாரீசில் இந்த ஆண்டின் இறுதியில் பருவநிலை மாநாடு நடக்க இருக்கிறது. நாம் அதில் ஒரு உறுதியான, வலுவான முடிவை நாடுவோம்.நீடித்து நிற்கத்தக்க வளர்ச்சி நோக்கத்தில், பருவநிலை மாற்றத்தில் நாம் இணைந்து பணியாற்றுவோம்.ஐ,.நா. பாதுகாப்பு கவுன்சிலில், நடப்பு எதார்த்த நிலையை பிரதிபலிக்கிற கண்ணாடியாக சீர்திருத்தங்கள் செய்வதற்கு குரல் கொடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.
