Published On: Tuesday, December 29, 2015
புதுச்சேரியில் விஜயகாந்த் தங்கியுள்ள ஹோட்டல் முன் திரண்டு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் உருவ பொம்மை எரிப்பு–300 பேர் கைது
புதுச்சேரி காமராஜர் சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தங்கியிருப்பதை அறிந்த அதிமுகவினர் ஹோட்டல் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதிமுகவினர் இரு பிரிவுகளாக பிரிந்து ஹோட்டலை முற்றுகையிட்டும், பாட்டில்களை வீசியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
தஞ்சாவூரில் (திங்கள்கிழமை) விஜயகாந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிக்கொண்டிருந்தபோது, எதிரில் இருந்த பஸ் ஸ்டாப் முகப்பில் பொருத்தியிருந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்தைப் பார்த்த விஜயகாந்த், "அவரது முகத்தைக் கூட பார்க் கப் பிடிக்கவில்லை. அதை மறையுங்கள்" என்றார்.அதன்படி, அருகில் தொங்கிய விஜயகாந்தின் பேனரைக் கொண்டு சில தொண்டர்கள் ஜெயலலிதா படத்தை பாதியளவு மறைத்தனர். சிறிது நேரம் கழித்து ஆர்வ மிகுதியில் ஒரு தொண்டர், பேனர் கயிற்றை அவிழ்த்து ஜெயலலிதா படத்தை முழுமையாக மறைக்க முயன்றார். அப்போது, விஜயகாந்தின் பேனர் அறுந்து விழுந்தது. இதைப் பார்த்த விஜயகாந்த், அப்படியென்றால், ஜெயலலிதா படத்தையும் அகற்றுங்கள் என்றார். உடனே, தொண் டர்கள் ஜெயலலிதா படத்தை பெயர்த்து வீசினர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேமுதிக பேனர்கள் கிழிப்பு சம்பவங்கள் நடைபெற்றுவருகின்றன.இந்நிலையில் , செவ்வாய்க்கிழமை கடலூரில் ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி வந்துள்ளார் விஜயகாந்த். புதுச்சேரி அதிமுக எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் ஒரு குழுவினரும், எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் மற்றொரு குழுவினரும் பிரிந்து ஓட்டலின் இரண்டு வாயில்களையும் முற்றுகையிட்டனர்.அப்போது கூட்டத்திலிருந்த சிலர் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி ஓட்டல் மீது வீசினர். சாலை மறியலிலும் ஈடுபட்டனர். முதல்வர் ஜெயலலிதாவை அவமதித்த விஜயகாந்தை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
பின்னர் அ.தி.மு.க.வினர் காமராஜர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டு கோரிமேடு போலீஸ் மைதானத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையில், சென்னையில் இருந்து வந்துள்ள வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜயகாந்த் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்தின் வழக்கறிஞர், "முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன் ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது" என்றார்.