Published On: Tuesday, December 29, 2015
அமைச்சர் றிஷாத் பதியூதீன் பங்குகொண்ட ஹிரு டிவியின் ‘சலகுன’ விவாதமும், சில முன் மொழிவுகளும் - மசூர் மௌலானா
ஹிரு தொலைக்காட்சியில் அமைச்சர் றிஷாத் பதியூதீன், ஆனந்த தேரருடன் செய்த விவாதமானது தனியே முஸ்லிம் சமூகத்தின் விவாதமாக எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், சம கால முஸ்லிம் அரசியலையும்-முஸ்லிம்களுக்கு ஏற்படும் அநீதி உள்ளிட்ட பல விடயங்களை அமைச்சர் றிஷாத் மூலமாக அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. என்று இன நல்லுறவு தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவரும், சமூக சிந்தனையாளரருமான அஷ்ஷேய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா ஊடகங்களுக்கு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த மௌலானா, ஆனந்த தேரர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்குமளவுக்கு முஸ்லிம் சமூகம் குறித்தும், வில்பத்து விவகாரம் உள்ளிட்ட பல விடயங்களில் அநீதியான அபாண்டங்களை சுமத்தியதை காணக் கூடியதாக இருந்தது என்றும், சில இடங்களில் அமைச்சர் றிஷாத் அவர்கள் பதில் சொல்ல முடியாதளவுக்கு ஆனந்த தேரர் குதர்க்கமாகவும், முரண்பாடகவும், மழுப்பலாகவும் கருத்துக்களை முன் வைத்தார். இவ்விடத்தில் றிஷாத் அவர்கள் தனியொரு மனிதராகவும், இனவாதத் தரப்பு நான்கு பேருடனும் ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுடனும் விதண்டாவாதங்களை முன்மொழிந்தனர் என்றும் தெரிவித்தார்.
சிங்களத்தில் தேர்ந்த மொழிப்புலமை இல்லாவிடினும் அமைச்சர் றிஷாத் இனவாதிகளின் விஷமக் கருத்துகளுக்கு தக்க பதிலடி கொடுக்கவும் தவறவில்லை. இருப்பினும், ஹிரு தொலைக்காட்சியின் நேற்றைய ‘சலகுண’ விவாதத்திற்கு அமைச்சர் றிஷாத் தனியே சென்றிருக்காமல் முஸ்லிம்களின் வரலாறு.மொழிப் புலமை, சமூக சிந்தனையும், ஆளுமையும் மிக்க ஓரிருவரை அழைத்துச் சென்றிருந்தால் எமது ஆழமான நியாயங்களை பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு புரிய வைத்த்திருக்கலாம்.
அமைச்சர் றிஷாத் அவர்கள் இலங்கையிலும் சர்வதேசத்திலும் அடையாளமிக்க ஒரு அரசியல்வாதியாகும். ஆனால், ஒரு தேரர் என்பதைத் தவிர எவ்வித அடையாளங்களுமற்ற ஆனந்த தேரருடன் விவாதம் புரிவதில் இருந்து அமைச்சர் ஒதுங்கியிருக்கலாம். சல்குண விவாதம் ஆனந்த தேரருக்கு ஒரு கட்டணம் செலுத்தப்படாத விளம்பரமாகி விட்டது.
மேலும், நேற்றைய விவாதத்தில் பொதுத் தளத்தில் பொதுப் பிரச்சினை பற்றிப் பேச வந்த ஆனந்த தேரர் அமைச்சர் றிஷாத் அவர்களின் தனிப்பட்ட விடயங்கள் குறித்துப் பேசி, விவாதத்திலிருந்து விலகிச் செயற்பட்டார். ஒரு ஆரோக்கியமிக்க கலந்துரையாடலில் இது பிழையான கோட்பாடாகும்.
ஆனந்த தேரர் நுனிப்புல் மேயும் ஒரு இனவாத கருவியாகவே நேற்று எனக்கு தென்பட்டார். இதற்கு நல்ல உதாரணம், நேற்றைய விவாதத்தில் அண்மையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டது ஒரு முஸ்லிம் பெண்ணேயாகும். ஆனால், ஆனந்த தேரர் அதனை தனிப்பட்ட இனவாத பிரச்சாரத்திற்காக கண்மூடித்தனமாக சிங்களப் பெண் என சித்தரித்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.
எல்லாவகையிலும் முஸ்லிம்கள் மீது குரோதமும், துவேசமும், நாட்டில் முஸ்லிம்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் நச்சுக் கருத்துக்களுடன் ‘சலகுன’ விவாதத்தில் தேரர்கள் குழு முஸ்லிம்களுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினர். இதனை முறியடிக்க அமைச்சர் றிஷாத் தனியாளாக தடுமாற வேண்டிய நிலையேற்பட்டது. அவரது சமூக உணர்ச்சியையும், இனப்பற்றையும் ஆத்மார்த்தமாய் நாம் அனைவரும் வரவேற்கின்றோம்
முஸ்லிம்களை மாற்றான் தாய் மனப்பான்மையில் எதிர்கொள்ளும் இனவாத விஷமிகளுடன் இச்சூழலில் ஒரு விவாதம் அவசியமில்லையெனும் கருத்து பரவலாயிருந்தாலும், அமைச்சர் றிஷாத் அவர்களுக்கு இதுவொரு தவிர்க்க முடியாத கருத்தாடல் களமாக அமைந்து விட்டது. கருத்துகள் விதைக்கும் தாக்கம் ஆபத்தானது என்பதை அனைவரும் உணர வேண்டும். அவசியமான இடங்களில் மௌனமும் மகத்தான வழிமுறையாகும். இது அரசியலுக்கும் பொருந்தும்.
