Published On: Sunday, December 27, 2015
அக்கரப்பத்தனை மன்றாசி நகரத்திலிருந்து போடைஸ் வழியாக அட்டன் செல்லும் தனியார் பேரூந்துகளில் செல்லும் பயணிகள் பல சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்
அக்கரப்பத்தனை மன்றாசி நகரத்திலிருந்து போடைஸ் வழியாக அட்டன் செல்லும் தனியார் பேரூந்துகளில் செல்லும் பயணிகள் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரியவருகின்றது.
மன்றாசி நகரத்தில் இருந்து மாலை நேரங்களில் அட்டன் செல்லும் பேரூந்துகளில் பெரும்பாலான ஆண்கள் மது அருந்தி போதையில் பிரயாணம் செய்வதனால் பெண்கள் மற்றும் சிறுவர் சிறுமிகளும் பல்வேறுபட்ட இடையூர்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையில் உள்ள ஆண்கள் பெண்களிடம் சில்மிஷங்களில் ஈடுபடுவதோடு அதிகமான சத்தங்களை எழுப்பி ஏனைய பயணிகளுக்கு இடையூர்களை ஏற்படுத்துவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால் நகரத்திற்கு வரும் பெண்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு மாலை நேரங்களில் பேரூந்துகளில் வீடுகளுக்கு செல்ல அஞ்சுகின்றனர். அத்தோடு மன்றாசி நகரத்தில் பஸ் தரிப்பிடம் மதுபானசாலையை ஒட்டியே அமைந்துள்ளதால் மது அருந்துவதற்கு சாதகமாகவே உள்ளது.
மேலும் பேரூந்தில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் பிரதான வீதியில் இருந்து மிக தொலைவில் உள்ள தோட்டங்களுக்கு பாதுகாப்பு அற்ற இருண்ட பாதைகளின் ஊடாக வீட்டுக்குச்செல்லவேண்டிய நிலமை ஏற்படுவதாகவும் இதன் காரணமாக குடும்பத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தெரியவருகின்றது.
பாதுகாப்பு நலன் கருதி அக்கரபத்தனை பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென பயணிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.