Published On: Sunday, December 27, 2015
டயகம நகரத்தில் குரங்குகளினால் தொல்லை - மக்கள் சிரமம்
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம நகரத்தில் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் வியாபாரங்களை முன்னெடுக்க முடியாத நிலையில் இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்நகரத்தில் 300இற்கும் மேற்பட்ட குரங்குகள் நடமாடுகின்றது.
வியாபார கடைகளில் முன்பகுதிகளில் காட்சிபடுத்தபட்டுள்ள பொருட்களை நாசபடுத்தும் இதேவேளை கடைகளில் விற்பனைக்காக வைக்கபட்டுள்ள பழங்களையும் வீணாக்குவதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரதேச மக்கள் இந்நகரத்தில் இருந்து பொருட்களை எடுத்துசெல்லும் போது கைகளில் உள்ள உணவு பொதிகளை பறிக்கின்றது. இதன் காரணமாக இப்பகுதி மக்கள் நகரத்திற்கு வந்து செல்வதில் பல இடர்களை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பாடசாலைக்கு வரும் மாணவர்கள் புத்தக பைகளை சுமந்துசெல்லும் போது குரங்குகளின் அட்டகாசத்தால் மாணவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் குரங்குகளின் பிடியிலிருந்து விடுபட்டு செல்லவேண்டிய துர்பாக்கிய நிலை இந்நகரத்தில் தொடர்கின்றது.
அத்தோடு நகரத்தில் உள்ள வீடுகளில் உடைகளை வெளியில் போடும் பட்சத்தில் அவைகளை கொண்டுசெல்வதால் பாடசாலை மாணவர்கள் உட்பட வீட்டில் உள்ள பெரியோர்களும் பல பிரச்சனைகளை எதிர்நோக்குவதாக நகர வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நகரத்தில் நிறுத்திவைக்கபட்டுள்ள வாகனங்கள் மற்றும் பேரூந்துகளில் ஏறி குரங்குகள் அட்டகாசம் பண்ணுவதால் வாகன சாரதிகள் மற்றும் பயணிகளும் சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரியவருகின்றது.
இப்பகுதி மக்களின் பாதுகாப்பு நலன் கருதி டயகம பொலிஸ் நிலையம் மற்றும் வன அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
(க.கிஷாந்தன்)