Published On: Thursday, December 17, 2015
ஞானசார தேரரின் குர்ஆனை நிந்திக்கும் கருத்துக்கள் குறித்து பிரதமருக்கு முஜிபுர் ரஹ்மான் விளக்கமளிப்பு
பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர் அல் குர்ஆனை நிந்திக்கும் வகையிலும் இலங்கை முஸ்லிம்களை அவமதிக்கும் வகையிலும் தெரிவித்த கருத்து குறித்து பிரதமருக்கு விளக்கமளித்ததாக தெரிவித்த பராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இது குறித்து பொலிஸ்மா அதிபரை சந்தித்து கலந்துறையாட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மத நிந்தனைகளுக்கு எதிராக தேசிய அரசாங்கத்தினால் கொண்டு வரப்படும் சட்டத்திற்கு எதிராக நேற்று முன்தினம் கிருலப்பனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் பொது பல சேனா அமைப்பினர் இஸ்லாம் குறித்து மோசமாக கருத்து வெ ளியிட்டிருந்தார். இது குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க என்னிடம் விளக்கம் கேட்டிருந்தார் என பாராளுமன்ற உறுப்பினரும் கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.
ஞானசார தேரரின் கருத்துக்கள் குறித்தும் அதன் பாரதூரமான விளைவுகள் குறித்தும் விளக்கமளித்ததாக தெரிவித்த முஜிபுர் ரஹ்மான் நாளைய (வெள்ளிக்கிழமை) தினம் பொலிஸ்மா அதிபர் என்.கே. இளங்ககோன் சந்திக்கவுள்ளேன் என்றார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்இ பொது பலசேனாவின் அராஜகங்கள் ஆரம்பமான முதல் நாம் இது இதனை தடுப்பதற்கு சட்டமொன்று உருவாக்கப்பட்ட வேண்டும் என எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து வந்தோம். இதற்கு எதிராக செயற்பட்ட மஹிந்த அரசு இனவாதிகளை போசித்து இவர்களுக்கு பாதுகாப்பளித்து இச்செயற்பாட்டுக்கு ஊக்கமளித்தது.
இதனால் நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேன அமைப்பு உள்ளிட்ட சில இனவாத அமைப்களின் கைகள் ஓங்கியிரந்தன. அவர்களின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் சிறுபான்மையினர் நிம்மதியிழந்திருந்தனர். இதுவே கடந்த அரசாங்கம் வீழ்வதற்கும் காரணமாயிற்று.
ஜனவரி மாதம் புதிய அரசியல் மாற்றமொன்றை உருவாக்க நாம் புறப்பட்டபோது எமது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் மத நிந்தனைகளை தடுப்பதற்கு சட்டமொன்று கொண்டு வருவோம் வாக்குறுதியளித்தோம். அவ்வாறே கடந்த பொதுத் தேர்தலின்போதும் ஐ.தே.க. இந்த உறுதிமொழியை வழங்கியது. அதற்கான ஆணையையும் மக்கள் தேர்தலின்போது அளித்தனர்.
இதனடிப்படையில் நாம்தற்போது இச்சட்டத்தை கொண்டுவருகின்றோம். இதற்கு எதிராக பொது பலசேனா போர் கொடி தூக்க ஆரம்பித்துள்ளது. அத்துடன் இஸ்லாத்தை அவமதிக்கும் விதத்திலும் முஸ்லிம்களை எரிச்சலூட்டும் விதத்திலும் விசமக் கருத்துக்களை வெ ளியிடுகின்றது. அத்துடன் முஸ்லிம்களின் வேத நூலான குர்ஆணை அவமதிக்கும் விதமான கருத்துக்களை மீண்டும் மீண்டும் பரப்புகின்து. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
