Published On: Monday, January 18, 2016
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கின 20-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் வருகிற மே மாதம் 22-ந் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அதற்கு முன்னதாக சட்டசபை தேர்தலை நடத்தியாக வேண்டும். அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. அடுத்த மாதம் (பிப்ரவரி) இறுதியிலோ, மார்ச் மாதம் முதல் வாரத்திலோ தமிழக சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் இறுதியில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், வருகிற 20-ந் தேதிக்கு மேல் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் டெல்லியில் இருந்து சென்னை வந்து தமிழக அதிகாரிகளுடன் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து, அவர்களின் கருத்துகளை கேட்க இருக்கின்றனர். சட்டசபை தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் ஆகியோருடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டம் இம்மாதம் இறுதி வரை நடக்கிறது.
தமிழகத்தில் 5 கோடியே 66 லட்சத்து 81 ஆயிரத்து 842 வாக்காளர்கள் இருக்கின்றனர். 1-1-2016 அன்று 18 வயது பூர்த்தியானவர்களும் தங்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. கடந்த 5-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்பட்டதால், இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், 20-ந் தேதி (நாளை மறுநாள்) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. வாக்காளர்களின் கூடுதல் வசதிக்காக, 22-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.வருகிற 25-ந் தேதி தேசிய வாக்காளர் தினம் என்பதால், வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கும், திருத்தம் கோரியவர்களுக்கும் அன்று முதல் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் நிலை இருப்பதால், மொத்தம் 75 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே 8 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ளன. போட்டியிடும் வேட்பாளர் களை பொறுத்தே, தேவைப்படும் வாக்குப்பதிவு எந்திரங்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க முடியும். என்றாலும், தேவைக்கு அதிகமாகவே வெளிமாநிலங்களில் இருந்து வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்படுகின்றன.
முதற்கட்டமாக, கடந்த 14-ந் தேதி மராட்டிய மாநிலத்தில் இருந்து லாரிகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரும் பணி தொடங்கியது. அங்கிருந்து மொத்தம் 15 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட இருக்கின்றன. முதலாவதாக, மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து 2,762 வாக்குப்பதிவு எந்திரங்கள் (கண்ட்ரோல் யூனிட் 2,762, பேலட் யூனிட் 2,762) சேலம் மாவட்டத்திற்கு 7 லாரிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.
அதேபோல், அந்த மாநிலத்தில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் 950 வாக்குப்பதிவு எந்திரங்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு நீலகிரி மாவட்டத்திற்கு எடுத்து வரப்பட்டன. இதுவரை, 3,712 வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. மேலும், குஜராத் மாநிலத்தில் இருந்து 10 ஆயிரம் எந்திரங்களும், பீகாரில் இருந்து 50 ஆயிரம் எந்திரங்களும் கொண்டு வரப்பட உள்ளன. இவை அனைத்தும் இம்மாதம் இறுதிக்குள் வந்து சேரும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, தனது இணையதள டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். சென்னைக்கு, வருகிற 26-ந் தேதிக்கு மேல் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட உள்ளன.
