Published On: Tuesday, January 19, 2016
எமக்கு கடவுள் தந்திருக்கின்ற இந்தக் குழந்தைகளை யாராக ஆக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் சவாலகா எடுத்துக் கொள்ள வேண்டும்
எமக்கு கடவுள் தந்திருக்கின்ற இந்தக் குழந்தைகளை யாராக ஆக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் சவாலகா எடுத்துக் கொள்ள வேண்டிய விடயம். எமது பல பிரதேசங்களில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றார்கள். எமது பெற்றோர்கள் நினைத்தால் ஒவ்வொரு பிள்ளைகளையும் அவ்வாறானதொரு நிலைக்கு உயர்த்தி ஆசிரியர் பற்றாக்குறை என்கின்ற நிலையினை மாற்ற முடியும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட மீனவர்களின், விவசாயிகளின் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைக்கும் நிகழ்வு வாகரை மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்!
ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகளில் கண்ணும் கருத்துமாக இருந்து அவர்களை கல்வியில் ஊக்குவிக்க வேண்டும். விவசாய அமைச்சின் மூலம் இவ்வாறு கல்விக்கு என கற்றல் உபகரணங்கள் வழங்க முடியும் என்று எண்ணவில்லை ஆனால் நாம் அவ்வாறானதொரு நிலையினை சட்டத்திற்குட்பட்டு அதற்கு ஒரு பொருள்கோடலைக் கொடுத்து தற்போது மேற்கொண்டுள்ளோம்.
இதனை நாம் ஒரு அடையாளத்திற்காகவே எமது மாணவர்களுக்கு கொண்டு வந்திருக்கின்றோம். இந்தப் பிரதேசத்தில் இருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இவ்வாறு கொடுக்க வேண்டும் என்கின்ற அவா எம்மிடத்தில் இருக்கின்றது ஆனால் தற்போதைய நிலையில் ஒரு குறிப்பிட்டவர்களுக்கு மாத்திரமே கொடுக்க முடிந்திருக்கின்றது.
அது மாத்திரம் அல்ல எமது மாணவர்களுக்கு உதவி செய்வதற்கு சகலரும் தயாராக இருக்கின்றோம். அதேவேளை பெற்றோர்களாகிய நீங்களும் பிள்ளைகள் தொடர்பில் அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
ஆசிரியர் எஸ்.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், மார்க்கண்டு நடராசா, வாகரை பிரதேச செயலாளர் செல்வி.எஸ்.இராகுலநாயகி, கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, மாகாண விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எஸ்.கோகுலதாசன் ஆகியோர் கலந்து கொண்டதுடன், வாகரைப் பிரதேச பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வறிய மாணவர்களின் கல்விச் செயற்பாட்டினை மேம்படுத்தும் முகமாக வாகரைப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளின் மீனவ மற்றும் விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் 330 பேருக்கு சுமார் 1600 ரூபாய் பெறுமதியுள்ள கற்றல் உபகரணம் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சித் திட்டமானது மூன்று மாவட்டங்களிலும் உள்ள மூவின மாணவர்களுக்கும் செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ந.குகதர்சன்,
வாழைச்சேனை நிருபர்